இந்தியாவில் மொத்தம் 27.76 கோடி மக்கள் சமையல் எரிவாயு சிலிண்டர்களை பயன்படுத்துகின்றனர். காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் மானிய விலையில் சமையல் எரிவாயு சிலிண்டர் வழங்கப்பட்டு வந்தது. மோடி தலைமையிலான பாஜக அரசு மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சமையல் எரிவாயு சிலிண்டருக்கான மொத்த தொகையையும் வசூலித்தது. மானியத் தொகை மக்களின் வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்துவதாக அறிவித்தது. அரசு வழங்கும் மானியத்தின் பலன் மக்களுக்கு நேரிடையான பண பலனாக இருக்கும் என்று தெரிவித்தது.
இதுவரை அவ்விதமே அவரவர் வங்கிக்கணக்கில் சமையல் எரிவாயு மானியத் தொகை செலுத்தப்பட்டு வந்தது. ஆரம்பத்தில் 250 ரூபாய்க்கு மேல் செலுத்தப்பட்டு வந்த மானிய தொகை படிப்படியாக குறைக்கப் பட்டது. கடந்த நான்கு மாதங்களாக மானியம் எதுவும் வாடிக்கையாளர்களின் வங்கி கணக்கில் செலுத்தப்படவில்லை. இனிமேல் சமையல் எரிவாயு சிலிண்டருக்கு மானியம் வழங்கப்பட மாட்டாது என மத்திய அரசு அறிவித்துள்ளது. இதன் மூலம் அரசுக்கு ஆண்டொன்றுக்கு 20 ஆயிரம் கோடி ரூபாய் வரை மிச்சமாகும் இந்த தொகை கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு செலவிடப்படும் என அரசு தெரிவித்துள்ளது. மத்திய அரசின் இந்த அதிரடி முடிவு நடுத்தர மற்றும் ஏழை மக்களுக்கு அதிர்ச்சியை அளித்துள்ளது.