எந்த ஒரு மங்கள நிகழ்ச்சிகளை துவங்கும் பொழுதும் நாம் முழுமுதற் கடவுளான விநாயகரை வணங்குவது வழக்கம், தடைகளை தகர்ப்பவர் விநாயகர் என்பதால் தான் விநாயகரை வணங்கி தொடங்குகிறோம்.
விநாயகரை வணங்க சிறப்பான நாட்களாக கருதப்படும் நாட்கள் விநாயகர் சதுர்த்தி, ஒவ்வொரு வளர்பிறை மற்றும் தேய்பிறையில் சதுர்த்திகளும் சிறப்பானவை. இதில் தேய்பிறையில் வரும் சதுர்த்தியை சங்கடஹர சதுர்த்தி என கூறப்படுகிறது, அதில் விநாயகர் சதுர்த்திக்கு முந்தைய தேய்பிறையில் வரும் சதுர்த்தியானது மகா சங்கடஹர சதுர்த்தியாகும்.
சங்கடஹர சதுர்த்தியின் சிறப்புகள்
சங்கடஹர சதுர்த்தி என்பது சங்கடங்களை தீர்க்கும் சதுர்த்தியாகும், சந்திரன் தன் அழகில் கர்வம் கொண்டு விநாயகரை அவமதித்ததாகவும் கோபம் கொண்ட விநாயகர் சந்திரனுக்கு சாபமிட்டதாகவும், சாப விமோசனத்திற்காக சந்திரன் விரதமிருந்து விநாயகரை வணங்கியதால் சாப விமோசனம் கிடைத்தது என்றும் சந்திரன் விரதமிருந்த நாள் சங்கடஹர சதுர்த்தி எனவும் கூறப்படுகிறது. அதனால் சங்கடஹர சதுர்த்தியில் விரதமிருந்தால் சங்கடங்களை தீர்த்துவைப்பார் என்பது ஐதீகம்.
யாரெல்லாம் விரதமிருக்கலாம்?
திருமணமாகதவர்கள், குழந்தைவரம் வேண்டுவோர், உடல்நல பிரச்சனைகள் உள்ளவர்கள், வேலை தேடுவபவர்கள் சங்கடகர சதுர்த்தி விரதமிருப்பது சிறப்பு
விதமிருப்பது எப்படி?
சங்கடஹர சதுர்த்தியன்று அதிகாலை குளித்து விநாயகரை வணங்கி நாள் முழுவதும் உணவருந்தாமல் (உடல்நலம் கருதி பால் பழங்களை சாப்பிடலாம்) விரதம் இருக்க வேண்டும், நாள் முழுவதும் விநாயகர் துதி பாடி சந்திர உதயமாகும் பொழுது விநாயகர் கோவிலுக்கு சென்று விநாயகருக்கு அருகம் புல் மாலை அணிவித்து 11 முறை விநாயகரை சுற்றிவந்து தங்களின் வேண்டுதல்களை வேண்டிக்கொள்வதன் மூலம் சிறந்த பயனை அடையமுடியும் என்பது நம்பிக்கை.