தமிழகத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் இன்று மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தி வருகிறார். சென்னையைத் தொடர்ந்து பல்வேறு மாவட்டங்களில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் பரிசோதனைகள் மற்றும் சிகிச்சை நடவடிக்கையை தீவரமாக மேற்கொள்ளப்படுகிறது. தமிழகத்தில் நாளுக்கு நாள் வேகம் எடுத்து வரும் கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்தும் விதமாக ஜூலை 1ம் தேதி முதல் 31ம் தேதி வரை ஐந்தாம் கட்டமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.
இன்னும் 2 நாட்களில் ஊரடங்கு நிறைவடைய உள்ள நிலையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மாவட்ட ஆட்சியர்களுடன் காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்தி வருகிறார். இந்த ஆலோசனையில் தொற்று அதிகமுள்ள மாவட்டங்களில் அதனை கட்டுப்படுத்துவது குறித்தும் ,கொரோனா நிலவரம் மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசனை நடைபெற்று வருகிறது.
ஆகஸ்ட் 1ம் தேதிக்கு பிறகு ஊரடங்கை நீட்டிப்பதா அல்லது தளர்த்துவதா என்பது குறித்தும், பொது போக்குவரத்து, தியேட்டர்கள் திறப்பு, சினிமா படப்பிடிப்பிற்கு அனுமதி உள்ளிட்ட விஷயங்கள் குறித்தும் விவாதிக்கப்பட உள்ளது. இந்த ஆலோசனை கூட்டத்தில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், தலைமைச்செயலாளர் சண்முகம், சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர்.