மத நல்லிணக்கத்திற்கு பெயர் பெற்றது நாகை மாவட்டம். நாகப்பட்டினத்தில் இருந்து 25 கி.மீ தொலைவில் உள்ளது கீழகாசாகுடி. புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டத்தைச் சேர்ந்த கீழகாசாகுடி பகுதியில் ஒத்தை பனைமர முனீஸ்வரருக்கு சிறிய அளவில் கோயில் ஒன்றை அமைத்து அப்பகுதி மக்கள் வழிபட்டு வந்தனர். கோயில் இருக்கும் அந்த நிலம் காரைக்காலை சேர்ந்த சின்னதம்பி என்கிற அப்துல்காதர் என்ற இஸ்லாமியருக்கு சொந்தமானது. தற்போது இக்கோயிலைச் சுற்றி வீடுகளும், வீட்டு மனைகளும் பெருகி மக்கள் அதிகளவில் வசித்து வருகின்றனர். இதனால் ஒத்தை பனைமர முனீஸ்வரர் கோயில் தற்சமயம் அதிக மக்கள் கூடும் வழிபாட்டு தலமாக மாறியுள்ளது.
இதை அறிந்த அப்துல்காதர் சுமார் 1200 சதுர அடிக் கொண்ட தன்னுடைய நிலத்தை கோயிலுக்கு தானமாக வழங்க முடிவு செய்தார். இதனையடுத்து கோயிலில் நடந்த நிகழ்ச்சியில், புதுச்சேரி வேளாண்துறை அமைச்சர் கமலகண்ணன் முன்னிலையில் அப்துல் காதர், தனது நிலத்தை கோயிலுக்கு தானமாக வழங்கியதற்கான பத்திரத்தை கோயில் நிர்வாகிகளிடம் வழங்கினார். இது குறித்து அப்துல் காதர் கூறுகையில், “எனக்கு சொந்தமான இடத்தில் நமது இந்து சொந்தங்கள் கோயில் அமைத்து வழிபாடு நடத்தி வருகின்றனர். மத நல்லிணக்கத்திற்காக என்னுடைய பெயரில் இருந்த 1200 சதுர அடி நிலத்தை இந்த கோயிலுக்காகவும், கீழகாசாகுடி மக்களுக்காகவும், மனமார மகிழ்ச்சியாக தானமாக கொடுக்கிறேன்” என்று நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.