இந்தியாவில் முதன் முதலில் கொரோனாத் தொற்று கண்டறியப்பட்டது கேரளாவில் தான். நிபா வைரஸை வெற்றிகரமாக கையாண்ட அனுபவம் இருந்ததால் இதுவரை அங்கு கொரொனாத் தொற்று சமூக பரவலாக மாறவில்லை.
இன்றுவரை கேரளாவில் பாதிக்கப்பட்டவர்கள் என்ணிக்கை 19727 ஆகவும், இத் தொற்றிலிருந்து மீண்டவர்கள் 10045 ஆகவும் உள்ளது. கொரோனா பாதிப்பினால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 63 ஆக உள்ளது. பிற மாநிலங்கள் கோவிட்-19 பாதிப்பில் கேரளாவை பின்னுக்கு தள்ளிவிட்டு முன்னேறி சென்றுக் கொண்டிருக்கின்றன.
இதுவரை கேரளாவில் கட்டுக்குள் இருந்த கொரோனா தொற்று இப்பொழுது சமூக பரவலாக மாறிவிட்டதோ என்று அரசு அச்சப்பட ஆரம்பித்திருக்கிறது. இதற்கு கடந்த ஒரு வாரமாக அங்கு அதிகரித்து வரும் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை தான் காரணம். கேரளாவில் இன்று மட்டும் புதிதாக கொரோனா தொற்று 702 நபர்களுக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று கொரோனாவல் இரண்டு உயிரிழப்புகள் நிகழ்ந்துள்ளன.
திருவனந்தபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கொரோனா பரவல் தீவிரமடைந்து வருகிறது. இதையடுத்து இன்று காணொளி வாயிலாக நடந்த கேபினெட் கூட்டத்திற்கு பிறகு கேரள முதல்வர் பினராயி விஜயன் முதன்மை செயலாளர் தலைமையில் குழு ஒன்றை அமைத்து தீவிர கொரோனா பரவல் குறித்தும், அமலில் இருக்கும் பொது ஊரடங்கில் தளர்வுகளை செயல்படுத்துவது குறித்தும் அறிக்கை தருமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.