கடந்த சில மாதங்களுக்கு முன்பு விருது ஒன்றில் தஞ்சை பெரிய கோவில் குறித்து ஜோதிகா பேசியது சர்ச்சையை கிளப்பியது. ராட்சசி பட ஷூட்டிங்கின் போது அங்குள்ளவர்கள் தன்னை தஞ்சை பெரிய கோவிலை காணும் படி சொன்னதாகவும், ஆனால் அதற்கு எதிர்புறமுள்ள அரசு மருத்துவமனையின் நிலை மிகவும் மோசமாக இருப்பது வேதனை அளிப்பதாகவும் கூறினார். நாம் கோவில்களுக்கு நிறைய செய்கிறோம், உண்டியல்களில் காசு போடுகிறோம், நிதி கொடுக்கிறோம். அந்த காசை பள்ளிகள், மருத்துவமனைகளை பராமரிக்க கொடுங்கள் என கோரிக்கை விடுத்தார்.
ஜோதிகாவின் கருத்துக்கு எதிராகவும், ஆதரவாகவும் பல கருத்துக்கள் பரவி வந்தது. இந்நிலையில் தஞ்சாவூரில் உள்ள ராஜா மிராசுதார் அரசு மருத்துவமனைக்கு ரூ.25 லட்சம் நிதி உதவி செய்துள்ளார். அந்த மருத்துவமனையில் மோசமாக இருந்த குழந்தைகள் வார்டை சீரமைக்க பண உதவியும், அந்த வார்டுக்கு தேவையான மருத்துவ உபகரணங்களையும் வாங்கி கொடுத்துள்ளார். மருத்துவமனை வளாகத்தில் இருந்த பூங்காவையும் புதுப்பொலிவுடன் சீரமைத்து கொடுத்துள்ளார்.
மருத்துவ உபகரணங்கள் மற்றும் நிதி அகரம் அறக்கட்டளை மூலமாக தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரிடம் வழங்கப்பட்டுள்ளது. ஜோதிகாவின் இந்த உதவி மகத்தானது என அரசின் சார்பில் அமைச்சர் விஜயபாஸ்கர் பாராட்டு தெரிவித்துள்ளார். இந்த நிகழ்ச்சியில் வேளாண் துறை அமைச்சர் துரைக்கண்ணு, எம்.பி. வைத்திலிங்கம், மாவட்ட ஆட்சியர் கோவிந்த் ராவ், மருத்துவமனை டீன் மருதுதுரை ஆகியோர் பங்கேற்றனர்.