தமிழகத்தில் காலியாக உள்ள மத்திய மாநில அரசுப் பணிகளில் தமிழர்களுக்கு முன்னுரிமை தர வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் இன்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் போராட்டங்கள் நடந்து வருகிறது. சென்னை வளசரவாக்கத்தில் போராட்டத்திற்கு தலைமை தாங்கிய தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் செய்தியாளர்களிடம், தமிழகத்தில் அரசு, பொதுத்துறை மற்றும் தனியார் வேலை வாய்ப்புகளில் வட இந்தியர்களின் ஆதிக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இது குறித்து தமிழகமுதல்வர் பழனிச்சாமியின் கவனத்திற்கு கொண்டு சென்றோம். ஆனால் அவர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
தமிழகத்தில் மத்திய மாநில அரசு நிறுவனங்கள், பொதுத்துறை நிறுவனங்கள், ரயில்வே வேலைவாய்ப்புகள் அனைத்திலும் வட மாநிலத்தவர்களே அதிகம் பணியில் அமர்த்தப்படுகிறார்கள். பேங்க் ஆப் இந்தியா வங்கி தமிழகத்தில் உள்ள தனது கிளைகளுக்காக தேர்வு செய்த 8000 பணியாளர்களில் 7000 பேர் வட இந்தியர்கள் இப்படி இருந்தால் வங்கிகளுக்கு செல்லும் தமிழ் மக்களின் நிலை என்னவாகும்? என்று கேள்வி எழுப்பினார். மேலும் இந்த விவகாரத்திற்கு தீர்வு காணும் வரை தங்களுடைய போராட்டம் தொடரும் என தெரிவித்துள்ளார்.