ஸ்மார்ட் கிளாஸ் வண்ண கண்ணாடிகளால் கட்டப்பட்ட கழிப்பறைகள் இப்பொழுது ஜப்பானில் மக்களின் வரவேற்பை பெற்று வருகிறது. ஜப்பான் உலகின் தூய்மையான நாடுகளில் ஒன்றாக அறியப்படுகிறது. ஜப்பான் நாட்டின் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு மற்றுமொரு எடுத்துக்காட்டாக இந்த புதிய வகை ஸ்மார்ட் கிளாஸ் குளியலறை மற்றும் கழிப்பறைகள் திகழ்கின்றனர். அதில் அப்படி என்ன அதிசயம் என்று பார்ப்போமா…
கழிப்பறை உள்ளே யாரும் இல்லை என்றால் கண்ணாடிகளின் வழியே வெளியில் உள்ளவர்களுக்கு எந்த மறைவுமின்றி உள்ளே உள்ளது எல்லாம் தெளிவாக தெரியும். யாராவது ஒரு நபர் உள்ளே சென்று கதவை மூடினால் அந்த கண்ணாடிகளும் மறைவை உண்டாக்கிக் கொள்ளும். இப்பொழுது வெளியில் இருந்து உள்ளே பார்த்தால் எதுவும் தெரியாது. வண்ண கண்ணாடியாக மட்டுமே தெரியும். இந்த புதுவகை கண்ணாடி மூலம் யாராவது கழிப்பறையைப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்களா, கழிப்பறை தூய்மையாக இருக்கிறதா என்பதை வெளியில் இருந்தே எளிதில் தெரிந்துகொள்ள முடிகிறது.
தற்சமயம் இந்த கழிப்பறைகள் டோக்கியோ நகரின் இரண்டு பொது பூங்காக்களில் நிறுவப்பட்டுள்ளது, இது வண்ண கண்ணாடிகளால் செய்யப்பட்டதால் இரவில் விளக்கொளியில் அழகாக காட்சியளிக்கிறது. இந்த புதிய வகையான கழிப்பறைகளை பாதுகாப்பானதாகவும் சுகாதாரமானதாகவும் வண்ணமயமாகவும் உருவாக்கியுள்ளார் பிரிட்ஸ்கர் பரிசு பெற்ற கட்டிடக் கலைஞர் ஷிகெரு பான்.