Newskadai.com
தேர்டு ஐ

இந்தியத் தத்துவம் – சிறிய அறிமுகம் : யசூர் வேத சம்கிதை

Indian Philosophy
Share this:

யசூர் வேத சம்கிதையின் காலம் கி.மு. 1100 – 800. இதுவும் சம காலத்தில் தோன்றியவை அல்ல, அதனால் நீண்ட கால எல்லைகளைக் கொண்டுள்ளது. இதில் 1984 பாடல்கள் காணப்படுகின்றன. யஜ் என்றால் வழிபடுதல், வேள்வியால் வழிபடுவதையே இந்த வேதத்தின் பெயர் குறிப்பிடுகிறது.

கிருஷ்ண யசூர், சுக்கில யசூர் என்று யசூர் வேத சம்கிதை இரு பிரிவுகளைக் கொண்டுள்ளது. கிருஷ்ண யசூர் சம்கிதையில் மந்திரங்களுடன் அதற்கான விளக்கங்களும் காணப்படுகிறது. சுக்கில யசூர் சம்கிதையில் மந்திரங்கள் மட்டும் காணப்படுகிறது. சுக்லம்என்றால் வெள்ளை, கிருஷ்ணம்என்றால் கறுப்பு. விளக்கம் இல்லாத யசுருக்கு வெள்ளை (சுக்கில) யசூர் என்றும் விளக்கங்கள் உள்ள யசுருக்குக் கறுப்பு (கிருஷ்ண) யசூர் என்று அழைக்கப்படுகிறது. தெளிவற்ற மந்திரங்களைத் தெளிவு பெறுவதற்காக விளக்கவுரை எழுதப்பட்டது. கிருஷ்ண யசுரைவிடச் சுக்கில யசூர் அதிகப் பாடல்களைக் கொண்டுள்ளது.

கிருஷ்ண யசூர் வேத சம்கிதையில் நான்கு உட்பிரிவுகள் உள்ளன. அவை தைத்திரீய சம்ஹிதை, மைத்திராயனீ சம்ஹிதை, சரக-கதா சம்ஹிதை, கபிஸ்தல-கதா சம்ஹிதை. சுக்கில யசூர்வேத சம்கிதையில் பதினைந்து உட்பிரிவுகள் இருந்ததாகக் கூறப்படுகிறது. ஆனால் இரண்டு உட்பிரிவுகள் மட்டுமே கிடைத்துள்ளன. அவை, வஜசனேயி மாத்தியந்தினியம், வஜசனேயி கான்வம்.

four veda

வஜசனேயி மாத்தியந்தினியம் குஜராத்திலும், நாசிக்குக்கு வடக்கேயுள்ள மகாராஷ்டிரத்திலும், வஜசனேயி கான்வம் நாசிக்குக்குத் தெற்கேயுள்ள மகாராஷ்டிரம், ஒரிசா, தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா ,கேரளா ஆகிய மாநிலங்களில் இன்று பின்பற்றப்படுகிறது

ஈசாவாஸ்யம், பிருகதாரணியம் என்ற சிறப்புப் பெற்ற இரண்டு உபநிடதங்கள் சுக்கில யசூர் வேதத் தொகுப்பில் தான் காணப்படுகிறது. அதே போல் சதபத பிராமணமும் இதில் தான் சேர்க்கப்பட்டுள்ளது. ஆனால் ஈசா உபநிடதம் ஆரண்யத்திற்கு அடுத்த இடமாக, வரிசைப்படி பெறாமல், சம்கிதைப் பகுதியில் காணப்படுகிறது.

ரிக் வேத சம்கிதை கால நிலப்பரப்பைக் கடந்து, இந்தச் சம்கிதையில், குரு பாஞ்சால நாடுகளைப் பற்றிப் பேசுகிறது. இதைக் கொண்டு ஆரியர்களுடைய புதிய இடப்பெயர்வுகளின் அடையாளத்தைக் காண முடிகிறது.

ரிக் வேத சம்கிதையில் உள்ள பாடல்கள் சில மாற்றங்களுடன் யசூர் வேத சம்கிதையில் பெரிய அளவில் இடம்பெற்றுள்ளன. இதைத் தவிர்த்து பல புதிய சூத்தங்களும் காணப்டுகிறது. யசூர் வேத சம்கிதையில் உள்ள உரைநடைப் பகுதி ஓசை நயமிக்க மந்திரங்களாக, கவர்ச்சி மிக்கதாக இருக்கின்றன.

உரைநடைப் பகுதியின் தொடக்கத்தில் “இது அக்கினிக்கு உரியது”, “அக்கினிக்கு நன்மை உண்டாகட்டும்” என்பதாக, சிறுசிறு சொற்றொடராகக் காணப்படுகிறது. இங்கே உரைநடை வளர்ச்சி அடைந்துள்ளதை அறியமுடிகிறது.

ரிக் வேத சம்கிதைப் போன்று தேவர்களைச் சிறப்பித்துக் கூறுவதை விடுத்து, யசூர் வேத சம்கிதையில் வேள்விக்குப் பயன்படுத்தப்படும் உபகரணங்களே சிறப்பைப் பெறுகிறது. அதாவது பாடப்படும் தேவர்களும், கருத்துகளும் முதன்மை தன்மை இழந்து, வேள்வியே சக்தி பெற்றதாகக் காணப்படுகிறது.

ரிக் தேவ சம்கிதையில் வேள்விகள் எளிமையாக நடத்தப்படுபவைகளாகும். யசூர் வேதத்தில் சிக்கலான விரிந்த கிரியைகளைக் கொண்டதான வேள்வியாக அமைந்துள்ளது. ஒரே கருத்து, சலிப்பை ஏற்படுத்தும் வகையில் மீண்டும் மீண்டும் கூறப்படுவதோடு, கருத்தில்லாத வியப்பிடைச் சொற்களை கொண்டதாகவும் காணப்படுகிறது.

நன்மைகளை வேண்டி செய்யப்படும் வேள்விகளுடன் தீமையை ஏற்படுத்தும் வேள்விகளும் இதில் இடம் பெற்றுள்ளன. தீயவைகளைச் சபித்து வெளியேற்றும் மந்திரங்களும், வேள்வி வேட்டலுக்குத் தடையான பகைவர்களை விரட்டுவதற்கான மந்திரங்களும் காணப்படுகிறது. நன்மை, தீமை ஆகியவைகளை ஏற்படுத்தும் மந்திரங்கள் ஒரெழத்து, ஈரெழுத்து, மூன்ரெழுத்துக் கொண்டதாக இருக்கிறது. இந்தப் பகுதிகள் அதர்வண வேத சம்கிதையை நினைவுப்படுத்துகிறது.

ஒருவர் தமது சம்மதத்தைத் தெரிவிக்கும் பொருளில் தான் ஓம் என்ற சொல் தொடக்கத்தில் பயன்படுத்தப்பட்டது. யசூர் வேத சம்கிதையில் ஓம் என்ற சொல், தெய்வத் தன்மை பெற்றதாகவும், ரகசியப் பொருள் பொதிந்ததாகவும் கூறப்படுகிறது. இதன் அடிப்படையில் உபநிடதங்கள் காலத்தில் ஓம் என்ற சொல் பிரம்மத்தை சுட்டுவதாகத் தத்துவ விளக்கம் கொடுக்கப்படுகிறது. இதனைக் கா.கைலாசநாதக் குருக்கள் தமது வடமொழி இலக்கிய வரலாறு என்ற நூலில் சுட்டிக்காட்டியுள்ளார்

ரிக் வேத சம்கிதை தோன்றிய காலத்தைப் போல் இல்லாது, இதில் வர்ண வேறுபாடுகள் வளர்ந்து உறுதிபெற்றுள்ளதைப் பார்க்க முடிகிறது. வேள்வி நடத்துவதை முன்வைத்து பிராமணர்கள், சமூகத்தில் முதலிடம் பெற்றுள்ளனர்.

பிற்காலத்தில் பிராமணங்கள் தோன்றுவதற்கு இந்த யசூர் வேத சம்கிதை உதவியதாகக் கொள்ளலாம். யசூர் வேத சம்கிதையை அறிந்தவர்களுக்குப் பிராமணங்களைப் புரிந்து கொள்வது எளிதாகும்.


Share this:

Related posts

முருகனும் தந்தை பெரியாரும்… தீப்பொறி தீயாய் மாறியது எப்படி…?

NEWSKADAI

அன்லாக் 4.O: மக்களை கொரோனாவுடன் மல்லு கட்ட விட்ட மத்திய அரசு…!!

POONKUZHALI

ஒட்டுமொத்த நாடும் கொரோனாவுடன் போராடிக்கொண்டிருக்கிறது… ஆனால் முகேஷ் அம்பானி??

MANIMARAN M

நவீன நீர்வழிச்சாலைத் திட்டம் : தமிழகத்தைக் காக்க வேண்டிய கட்டம்…

NEWSKADAI

மின்னலால் இனி மரணமில்லை… இந்திய விஞ்ஞானிகளின் புதிய தொழில்நுட்பம்…!

NEWSKADAI

இந்தியத் தத்துவம் சிறிய அறிமுகம் : பிராமணங்கள் – அ.கா.ஈஸ்வரன்

NEWSKADAI