Newskadai.com
தேர்டு ஐ

இந்தியத் தத்துவம் – சிறிய அறிமுகம் : சாம வேத சம்கிதை

Indian Philosophy
Share this:

சாம வேத சம்கிதையின் காலம் கி.மு. 1200 – 800. இதுவும் சம காலத்தில் தோன்றியவை அல்ல, அதனால் நீண்ட கால எல்லைகளைக் கொண்டுள்ளது.

ஆயிரம் சாம வேத சம்கிதைகள் இருந்ததாகக் கூறப்படுகிறது. தற்போது கிடைத்தவை மூன்று மட்டுமே. மொத்தம் 1875 மந்திரங்களைக் கொண்டுள்ளது. இவற்றில் மீண்டும் மீண்டும் வருகிற மந்திரங்களை நீக்கிவிட்டு 1549 மந்திரங்கள் என்று கணக்கிடப்பட்டுள்ளது.

இச் சம்கிதையில் காணப்படுபவைகளில் பெரும்பாலானவை, ரிக் வேத சம்கிதையில் இருந்து எடுதாளப்பட்டவை ஆகும். சாமம் என்றால் கானம் என்று பொருள். ரிக் வேத சூக்தங்களையும், 75 புதிய சூக்தங்களையும் ராகத்தில் பாடுவதற்காகத் தோன்றியது இந்த வேதம்.

எட்டாம், ஒன்பதாம் ரிக் வேத மண்டலங்களில் காணப்படுவைகளில் இருந்து இசை அமைத்துப் பாடுவதற்காக மாற்றங்கள் செய்யப்பட்டு இந்த வேதம் உருவாக்கப்பட்டுள்ளது. காயத்ரி, உஷ்னிக், அனுஷ்டுப், திரிஷ்டுப், ஜகதி, விக்ருதி போன்ற இருபத்தியோரு சந்தங்களில் இந்தச் சாம வேதம் பாடப்படுகிறது.

சாம கானத்தில் தேர்ச்சி பெற்றவர்களிடம் இருந்து முறையாகக் கற்றால் அன்றி இந்த வேதத்தில் தேர்ச்சி பெற முடியாது. இந்த வேதத்தை ராகத்தில் பாடும் போது, இசைக் கருவிகளையும் பயன்படுத்தி இருப்பர் என்று ஊகிக்கப்படுகிறது.

உபநிடதங்கள் தோன்றிய காலங்களில் காணப்படும் உலக வெறுப்பு, முக்தி விருப்பு என்கிற போக்கை, சம்கிதைக் காலங்களில் காண முடியாது.

இந்த வேதம் முழுதும் கானங்களாக இல்லாது மந்திரங்களும் கலந்து காணப்படுகிறது. அக்கினி, இந்திரன், சோமன் ஆகிய மூன்று தேவர்களைப் பற்றிய பாடல்களே அதிகம் காணப்படுகிறது. அக்கினியை நோக்கி பாடப்பட்ட பகுதியைப் பார்ப்போம்.

“அக்கியே! எங்களுக்குச் செல்வத்தை வழங்கிடு, வளமையை நோக்கி இட்டுச் செல்லும் பாதையை எங்களுக்குக் காட்டு. உணவு தானியங்களையும், ஆற்றலையும் அடைகிற வழியையும் எங்களக்குக் காட்டு.”

(ஆக்னேய காண்டம்)

சம்கிதை காலங்களில் இகலோக இன்பங்களை விரும்புகிற மக்களையே காண முடிகிறது. எதிரிகள் வீழ்த்துவதையும், செல்வங்களை ஈட்டுவதையுமே சம்கிதை காலத்தில் உள்ள ஆரியர்கள் விரும்பினர். இதனை இந்த இந்திரன் பற்றிய பகுதியில் காணலாம்.

Samaveda

“இந்திரனே! எங்கள் பகைவர்களை அழித்திடு, நீ வஜ்ராயுதத்தைக் கையாள்கிறவன். எங்களுக்குச் செல்வங்களை வழங்கிடு. வேள்விகளை வெற்றி பெற செய்திடும் இந்திரன் வணங்கத்தக்கவன். இந்திரன் துணிச்சல் மிக்க வீரன், அவன் உங்கள் வேள்வியின்பால் ஈர்க்கப்படுவான். ஒரு நதியானது கடலில் கலப்பதைப் போன்று சோமரசமும் இந்திரனில் இரண்டறக் கலந்திடட்டும். இந்திரனே! உன்னைவிடச் சிறந்தவர் யார்? மக்கள் உன்னைத் திருப்திப்படுத்த சாமகானம் பாடுகிறார்கள். மக்கள் இந்திரனை வணங்குகிறார்கள். இந்திரன் செல்வங்களைக் கொடுக்கட்டும்”

(ஐந்திர காண்டம்)

அன்றைய மக்கள் செல்வங்களை வேண்டியே வேள்வி நிகழ்த்தினர். இகலோக விரும்பங்களையே நாடினர். இந்திரனுக்கு அடுத்தபடியாக இந்தச் சம்கிதையில் சோம பாணத்தைப் பற்றியே அதிகம் பாடப்பட்டுள்ளது. இதற்கு அடுத்து தான் அக்கினி பாடப்படுகிறது. இந்திரனைப் பற்றிய சூக்தங்களில் மட்டுமல்லாது அக்கினி பற்றிய சூக்தங்களிலும் சோம பாணம் பேசப்பட்டுள்ளது.

“சோமரசம் வேள்விக்காகப் பாத்திரங்களில் ஊற்றப்படுகிறது. அது தண்ணீரில் ஊற்றப்படுகிறது. காட்டை நோக்கி ஓடும் எருமையைப் போல் அந்த ரசம் தண்ணீருக்குள் பாய்கிறது. சோமரசம் புனிதப்படட்டும், எம்மை மனிதர்கள் நடுவே புகழுடையவராக்கட்டும். எங்கள் பகைவர்களை அது அழிக்கட்டும். சோமனே! எங்கள் வீரத்தைப் பெருக்கிடு. எங்களுக்கு எழுச்சியைக் கொடு. வேத வித்தர்கள் புனித துதிகளைப் பாடும்போது புனிதமடைகிறார்.”

(பவமான காண்டம்)

சாம சம்கிதையின் தொடர்ச்சியில் தான் சாந்தோக்கியம், கேனம் ஆகிய இரண்டு உபநிடதங்கள் இடம் பெற்றுள்ளது.

ரிக் என்றால் பாட்டு, யசூர் என்றால் வேள்வியால் வழிபடுதல், சாமம் என்றல் கானம் அதாவது ராகத்துடன் பாடுவது, நன்மை தீமையை விளைவிக்கும் மந்திரங்களைக் கொண்டது அதர்வணம் என்று வேதங்களை, நான்காகப் பிரித்துக் கூறுவது வழக்கம்.

.கா.ஈஸ்வரன்


Share this:

Related posts

நவீன நீர்வழிச்சாலைத் திட்டம் : தமிழகத்தைக் காக்க வேண்டிய கட்டம்…

NEWSKADAI

சிறுகதை : ஓட்டு கட்சி – முனைவர் ஆதன் குமார்

NEWSKADAI

மற்றொரு போபால் பேரழிவுக்கு திட்டமிடுகிறதா மத்திய அரசு?… கந்த சஷ்டி மடை மாற்றம் இதுக்குத் தானா?

NEWSKADAI

அண்ணாமலையின் அரசியல் சாணக்கியத்தனம்… டெல்லி உரையில் இதை கவனித்தீர்களா?

MANIMARAN M

“தல” தோனி திடீர் ஓய்வை அறிவிக்க காரணம் இவர்களா?… பரபரப்பு பின்னணி…!!

MANIMARAN M

பிரசாந்த் பூஷன்: ஒரு ரூபாய் அபராத வழக்கின் ஒப்புதல் வாக்குமூலம்..!!

NEWSKADAI