Newskadai.com
தேர்டு ஐ

இந்திய தத்துவம்-சிறிய அறிமுகம் : ரிக் வேத சம்கிதை

Indian Philosophy
Share this:

ரிக் வேத சம்கிதையின் காலம் கி.மு. 1500 – 1100. இதில் உள்ள அனைத்து மந்திரங்களும் சம காலத்தில் படைக்கப்பட்டவை அல்ல. இதில் உள்ள பெரும்பாலான மந்திரங்கள் ஆரியர்கள் இந்தியாவுக்குள் வருவதற்கு முன் தோன்றியவை.

ரிக் வேத சம்கிதை பத்து மண்டலங்களைக் கொண்டது. ரிக் என்றால் பாடல் என்று பொருள். இதில் 10,522 பாடல்கள் இடம் பெற்றுள்ளன. பத்து மண்டலத்தில் இரண்டாம் மண்டலம் முதல் ஏழாம் முண்டலம் வரை உள்ள பாடல்கள் மிகவும் பழைமையானது. முதல் மற்றும் பத்தாவது மண்டலம் மிகவும் பிற்பட்ட காலத்தியவை என்று கருதப்படுகிறது.

இந்திரன், அக்கினி பற்றிய பாடல்களே அதிகம் இடம் பெற்றுள்ளது. அதே போல் சோம பாணம் பற்றிய பாடல்கள் அதிகம் காணப்படுகிறது. மொத்த பாடல்களில் நான்கில் ஒரு பகுதி இந்திரனைப் பற்றியவையாக இருக்கின்றன. ஒன்பதாவது மண்டலம் முழுமையும் சோம பாணத்தைப் பற்றிய பாடல்களை மட்டும் கொண்டுள்ளது.

விண்ணுலகம், மண்ணுலகம், இரண்டுக்கும் இடையேயான வளியுலகம் சார்ந்து வேதகால வேதர்களை மூன்று பிரிவாகப் பிரித்துள்ளனர். மித்திரன், வர்ணன், சூரியன், விஷ்ணு, உஷை போன்றவை விண்ணைச் சார்ந்த தேவர்கள், அக்கினி, சோமன், பிருகஸ்பதி போன்றவை மண்ணைச் சார்ந்த தேவர்கள், இந்திரன், உருத்திரன், மருத்துக்கள், வாயு போன்றவை வளியைச் சார்ந்த தேவர்கள்.

ரிக் வேத சம்கிதை எழுதப்பட்ட மொழி சமஸ்கிருதத்திற்கு முன்பான வைதீக மொழியாகும். பாணினிக்குப் பிறகு சமஸ்கிருதம் தோன்றுகிறது. சமஸ்கிருதம் மட்டும் தெரிந்தவர்களால் வேத சம்கிதைகளைப் படித்திட முடியாது. சமஸ்கிருத நெடுங்கணக்கில் “ல” மட்டுமே இடம் பெற்றுள்ளது. வேத சம்கிதையில் “ல” “ள” என்று இரண்டையும் பயன்படுத்தப்பட்டுள்ளது.

ரிக் வேத சம்கிதையின் பெரும் பகுதி, ஆரியர்கள் பஞ்சாப் பகுதிக்குள் நுழைவதற்கு முன்பு படைக்கப்பட்டவை ஆகும். மீதமுள்ள பாடல்களைக் கொண்டு ஆரியர்கள், பஞ்சாப்பில் இருந்து கிழக்கு நோக்கி நகர்ந்துள்ளதை அறிய முடிகிறது. வங்கத்து புலிகளைப் பற்றியும், சமஸ்கிருத இலக்கியத்தில் அதிகம் உவமையாகக் கூறப்படும் தாமரை மலரைப் பற்றியும் எத்தகைய குறிப்பும், ரிக் வேத சம்கிதையில் காணப்படவில்லை. அதே போல் கர்மா, ஆத்மா, முன்பிறவி, துறவு போன்றவைகளைப் பழைய சம்கிதையில் காண முடியவில்லை.

ரிக் வேத மந்திரங்கள் பொரும்பாலும் இயற்கையையும், இந்திரனை வீரத்திற்குத் தலைவனாகவும் உருவகப்படுத்தி எழுதப்பட்டவை ஆகும். போர்களில் வெற்றியும், வளங்களை வேண்டியும் எழுதப்பட்ட பாடல்களே ரிக் வேத சம்கிதையில் இடம் பெற்றுள்ளது. வேண்டுதலைப் பற்றி அல்லாத சமுகப் பற்றிய சிற்சில பாடல்கள் காணப்படுகின்றன.

திருமணம், ஈமச் சடங்குகள், சூதாட்டம் போன்ற சமூக நிகழ்வுகள் பற்றிய பாடல்களும் இடம் பெற்றுள்ளன. விட்டுப்போன மிகமிகப் பழைமையான பழக்கத்தைப் பற்றி, எமன் எமி உரையாடலாக ஒரு சூக்தத்தில் காணப்படுகிறது. பணம் படைத்தவன் ஏழைகளுக்குக் கொடுத்து உதவும்படி கேட்கிற ஒரு தனிச் சூக்தமும் இருக்கிறது. அதன் பெயர் பிக்ஷு சூக்தம்.

வேத சம்கிதைகளை, பழைமையின் பெருமையை முன்வைத்து மனப்பாடம் செய்வதோடு நம்நாட்டவர்கள் நின்றுவிடுகின்றனர். நம் நாட்டு ஆய்வாளர்களைவிட அதிகமாக மேலை நாட்டவர்களே பழைமையான சம்கிதைகளின் கருத்தை ஆராய்கின்றனர். “வேதங்கள் கூறும் கருத்தை அறியப் பெரிதும் முயன்றவர்கள் மேனாட்டவர்கள், இவர்களுள் தலைசிறந்தவர்கள் ஜெர்மானியரே. உலகில் விமரிசகர்கள் பலரின் முயற்சியால் வேதங்களின் மொழிபெயர்ப்புகள் பல மொழிகளில் தமிழிலும்கூட இதுவரை வெளிவந்துள்ளன.” என்று கா.கைலாசக் குருக்கள் கூறியுள்ளார்.

பத்தாவது மண்டலத்தில் பிற்காலங்களில் சேர்க்கப்பட்ட மந்திரங்களைத் தவிர வேறு மந்திரங்களில் தத்துவம் பற்றிய குறிப்புகள் சிறிதுகூடக் காணப்படவில்லை. அதனால் தான் சம்கிதைகளையும், பிராமணங்களையும் கர்ம காண்டம் என்று அழைக்கப்படுகிறது. ஞானக் காண்டத்தில் தான் தத்துவம் பற்றிப் பேசப்படுகிறது.

பத்தாவது மண்டலத்தில் வர்ணாஸ்ரம தர்மத்தை வலியுறுத்துகிற புருஷ சூக்தம் பிற்காலங்களில் சேர்க்கப்பட்டவையாகக் கருதப்படுகிறது. வேத சம்கிதை கால மக்கள் வர்ணங்களாகப் பிரிந்துள்ளதாகத் தெரியவில்லை. ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் வெவ்வேறு தொழில்களைச் செய்தது பற்றிய பாடல் சம்கிதையில் இடம் பெற்றுள்ளது. இதுவே அன்றைய ஆரியர்களின் சமூகமாகக் கொள்ள முடிகிறது. வேத அங்கிகாரம் பெறுவதற்காகப் பிற்காலத்தில் வர்ணாஸ்ரம தர்மத்தைப் பற்றிய பாடல்கள் சேர்க்கப்பட்டுள்ளது. இதே போல் பல சூக்தங்கள் வேத தொடர்புக்காக இணைக்கப்பட்டுள்ளது.

பிற்காலத்தவை என்றாலும் நாஸதீய சூக்தம் மிகவும் முக்கியமானதாகும். இதில் உள்ள பாடல்கள், பிரபஞ்சப் படைப்டைப் பற்றி விளக்குகிறது. படைப்பைப் பற்றிய இந்தப் பாடலே மிகமிகப் பழைமையானது. இங்குள்ள வைதீகர்களை விட ஆய்வாளர்களே இதன் சிறப்பை உணர்ந்து படித்து வருகின்றனர். இந்தச் சூக்தம் ஏழு மந்திரங்கள் கொண்ட மிகவும் சிறியது. இதனைத் தனியாக முழுமையாக அடுத்துப் பார்க்கலாம்.

-அ.க.ஈஸ்வரன்


Share this:

Related posts

“காதலித்து பார்”… ஆண் – பெண் நேசத்தை ஆதரிக்க பெற்றோரை தடுப்பது எது?

NEWSKADAI

சிறுகதை : ஓட்டு கட்சி – முனைவர் ஆதன் குமார்

NEWSKADAI

அன்லாக் 4.O: மக்களை கொரோனாவுடன் மல்லு கட்ட விட்ட மத்திய அரசு…!!

POONKUZHALI

இந்தியத் தத்துவம் சிறிய அறிமுகம் : பிராமணங்கள் – அ.கா.ஈஸ்வரன்

NEWSKADAI

இந்தியத் தத்துவம் – சிறிய அறிமுகம் : நாசதீய சூக்தம்

NEWSKADAI

“தல” தோனி திடீர் ஓய்வை அறிவிக்க காரணம் இவர்களா?… பரபரப்பு பின்னணி…!!

MANIMARAN M