வேதத்தொகுப்பில் சம்கிதைக்கு அடுத்ததாகப் பிராமணங்கள் வருகின்றன. வேள்வி செய்யும் போது அனுஷ்டிக்கப்பட வேண்டிய சடங்குகளைப் பிராமணகள் விவரிக்கிறது.
யசுர் வேதத்தில் சுருக்கமாகக் கூறப்பட்ட வேள்வியினைச் செய்யும் முறை பிராமணங்களில் விரிவாக விளக்கப்படுகிறது. மந்திரங்களுக்கும், வேள்வி கிரியைகளுக்கும் உள்ள தொடர்பையும், வேள்விக் கிரியைகளுக்கு இடையேயுள்ள தொடர்பையும் விரித்துரைக்கிறது.
வேள்வியில் இடம் பெறும் ஒவ்வொரு கிரியைகளுக்கும் அதற்குரிய தட்சணையையும் வரையறுத்து கூறப்பட்டுள்ளது. வேள்வி நிகழ்த்துவதனால் கிடைக்கும் இம்மை, மறுமைப் பயன்களையும் விவரிக்கின்றன.
நான்கு வேதங்களுக்கும் தனித்தனி பிராமணங்கள் இருக்கின்றன. மொத்தம் 19 பிராமணங்கள் தற்போது கிடைத்துள்ளன.
ரிக் வேதத்தைச் சேர்ந்தவை இரண்டு. ஐத்தரேய பிராமணம், கௌசிதாக்கி பிராமணம்.
யசுர் வேதத்தில் ஐந்து. சுக்கில யசுரைச் சேர்ந்தவை சதபத பிராமணம், கிருஷ்ண யசுரைச் சேர்ந்தவை மைத்திரயானி சங்கிதை, கதா சங்கிதை, கபிஸ்தலகதா சங்கிதை, தைத்திரீய சங்கிதை.
சாம வேதத்தைச் சேர்ந்தவை பதினொன்று. தண்டிய மகாபிராமணம், சட்விம்ச பிராமணம், சாமவிதான பிராமணம், அர்சேய பிராமணம், தேவதாத்தியாயப் பிராமணம், சாண்டோக்கிய பிராமணம், சங்கிதோபனிடத பிராமணம், வம்ச பிராமணம், ஜைமினிய பிராமணம், ஜைமினிய அர்சேய பிராமணம், ஜைமினிய உபநிடத பிராமணம்.
அதர்வ வேததத்தைச் சேர்ந்தவை ஒன்று. கோப்பத பிராமணம்.
இவை அனைத்தும் சம காலத்தில் தோன்றியதாகக் கூறமுடியாது. சாம, அதர்வண வேதங்களைச் சேர்ந்த பிராமணங்கள் காலத்தில் பிந்தியவை. அதர்வணச் சம்கிதையை நான்காம் வேதமாகச் சேர்த்திடும் போது, இதற்கான பிராமணங்களைப் புதியதாகச் சேர்க்கப்பட்டன.
பத்தொன்பது பிராமணங்களில் பிரபிலமானவையாக ஏழைக் குறிப்பிடலாம். ரிக் வேதத்தைச் சேர்ந்த பிராமணங்கள் 1) ஐத்தரேய, 2) கௌசிதாக்கி. யசுர் வேதத்தைச் சேர்ந்தவை 1) தைத்திரீய சங்கிதை, 2) சதபத பிராமணம், சாம வேதத்தைச் சேர்ந்தவை 1) தண்டிய மகாபிராமணம், 2) சட்விம்ச பிராமணம், 3) ஜைமினிய பிராமணம்.
பழைமையான ரிக் வேத சம்கிதைகளில், இந்திரன், அக்கினி போன்ற தேவர்களைச் சிறப்பித்துக் கூறப்பட்டிருக்கும். அதாவது அந்தப் பாடல்களில் தேவர்களை விளித்துப் பெருமைப்படுத்தப்பட்டிருக்கும். பிராமணங்களில் இந்தத் தேவர்களைப் பெருமைப்படுத்துவதைவிட வேள்விகளே முதன்மை இடத்தைப் பெற்றுள்ளது. அதே நேரத்தில் பெரிய அளவில் பேசப்பட்ட இந்திரன், அக்கினி போன்ற தேவர்களைவிட, வேத சம்கிதைகளில் குறைவாகப் பேசப்பட்ட விஷ்ணுவும் ருத்திரனும் பெரும் தெய்வங்களாக உயர்ந்து காணப்படுகின்றனர்.
பிராமணங்களில் எத்தகைய குறிக்கோளையும் முன்வைத்து வேட்கப்படுவதில்லை, வேள்வி வேட்டலே வாழ்க்கையின் குறிக்கோளாகக் கொள்ளப்படுகிறது.
பிராமணங்களை இருபிரிவாகப் பிரிக்கலாம் ஒன்று விதி, மற்றொன்று அர்த்தவாதம். வேள்வி கிரியைகள் செய்ய வேண்டிய ஒழுங்கு முறைகளைக் கூறுவது விதி. வேள்விக் கிரியைகளின் நோக்கம், விளக்கம், உட்பொருள் ஆகியவை பற்றி விவரிப்பது அர்த்தவாதம். அர்த்தவாதத்தில் கதைகள், பழைய வரலாறுகள், இதிகாச நிகழ்வுகள் ஆகியவையும் கூறப்பட்டுள்ளது. இவையே பிற்காலத்தில் இதிகாசங்கள், புராணங்கள் தோன்றுவதற்குக் காணரமாக இருந்தது.
இன்று நடைமுறையில் பிராமணங்களே இடம் பெற்றுள்ளன.
–அ.கா.ஈஸ்வரன்