Newskadai.com
தேர்டு ஐ

இந்தியத் தத்துவம் – சிறிய அறிமுகம் : அதர்வண வேத சம்கிதை

Indian Philosophy
Share this:

அதர்வண வேத சம்கிதையின் காலம் கி.மு. 1000 – 800. இதுவும் சம காலத்தில் தோன்றியவை அல்ல, அதனால் நீண்ட கால எல்லைகளைக் கொண்டுள்ளது. இதில் 5848 பாடல்கள் காணப்படுகின்றன. மொத்தம் இருபது காண்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. முதல் ஏழு காண்டங்கள், பாடல்களின் எண்ணிக்கைக் கொண்டு தொகுக்கப்பட்டுள்ளது. நான்கு, ஐந்து, ஆறு, ஏழு எனப் பாடல்களைக் கொண்டு, முதல் நான்கு காண்டங்கள் அமைந்துள்ளன. ஐந்து, ஆறு, ஏழு காண்டங்களில் எண்ணிக்கை மாறுதல்களுடன் காணப்படுகிறது

அதர்வண வேதத்தைத் தவிர்த்துவிட்டு, வேதங்கள் மூன்று (திரயீவித்யா) என்று கூறிவருகிற வழக்கம் நெடுங்காலமாக இருந்தது. வெகுகாலத்திற்குப் பிறகு தான் அதர்வணம், நான்காவதாக வேத எண்ணிக்கையில் சேர்க்கப்பட்டது. சேர்ப்பதில் தயக்கம் ஏற்பட்டதற்குக் காரணம் இதில் பேசப்பட்ட பொருளாக இருக்கலாம். இதில் உள்ள பாடல்கள் வசிய மந்திரங்களாக இருக்கிறது.

அதர்வண வேத சம்கிதை எந்தக் காலத்திற்கு உரியன என்பதில் அறிஞர்களிடடையே கருத்து வேறுபாடுகள் காணப்படுகிறது. அதர்வணம், ரிக் வேத சங்கிதைக்கு முன்பானதா, பின்பானதா என்று முடிவெடுப்பதில் குழப்பங்கள் நிறைய இருக்கின்றன. அதில் காணப்படும் கருத்துக்கள் இன்றைய நிலையில் அது மூடநம்பிகை கொண்டதாகக் காணப்படுவதனால், இதனை ரிக் வேதத்திற்கு முன்பானதாகக் கருதப்பட்டது. அதுமட்டுமல்லாது இது ஆரியர்களுக்கு உரியதா? என்கிற சந்தேகம் எழுப்புபவர்களும் இருக்கின்றனர். இங்குள்ள வட்டாரா மக்களின் கருத்தாக இருக்குமோ என்ற ஐயம் கொள்பவகர்களும் உண்டு. ஆனால் இதற்கு ஆதாரம் இருப்பதாகத் தெரியவில்லை.

four veda

மற்ற வேதங்களைப் போலவே இதிலும் ரிக் வேத பாடல்கள் சேர்க்கப்பட்டுள்ளது. மொத்தத்தில் ஏழில் ஒரு பகுதி ரிக் வேதப்பாடல்கள் மாறுதல்களுடன் காணப்படுகிறது. பல ஆய்வாளர்கள் இது ரிக்குக்குப் பிந்தியதாகவே கருதுகின்றனர். ரிக் வேதத்தில் பிற்காலத்தில் சேர்க்கப்பட்ட பாடல்கள், அதர்ணவத்தில் தற்காலத்தியதைப் போல் உள்ளதால், இந்த வேதம் பிற்காலத்தியவையாகக் கருதப்படுகிறது.

மற்ற மூன்று வேத சம்கிதையில் இந்திரன், அக்னி, சோமன், உஷை போன்ற உருவகப்படுத்தப்பட்ட தேவர்களை விளித்து வேண்டுவதாகக் காணப்படுகிறது. அதர்வணச் சம்கிதையில் இது போன்ற தேவர்களைப் பற்றிய பாடல்கள் மிகமிகக் குறைவாகவே காணப்படுகிறது. அதர்வணச் சம்கிதை மந்திரங்களாக இல்லாமல் மாந்திரிகமாகக் காணப்படுகிறது.

நன்மை, தீமைகளை விளைவிக்கும் பாடல்களைக் கொண்டுள்ளது. இதில் எதிரிகளை அழிப்பதற்கும், வரங்களைப் பெறுவதற்கும், நோயைக் குணப்படுத்துவதற்கும், எதிரிகளைத் தோற்கடிப்பதற்கும், விஷத்தை அகற்றுவதற்கும், பலத்தை அதிகரிபதற்கும், தூக்கமின்மையைப் போக்குவதற்கும், ஆயுளை அதிகரிப்பதற்கும், அமைதியை பெறுவதற்கும், கணவன்– மனைவி நல்லுறவுக்கும், ஆண்மை சிறந்திடவும், வாரிசை பெறுவதற்கும், சூதாட்டத்தில் வெற்றிப் பெறுவதற்கும், பேயை ஓட்டுவதற்கும், விஷத்தை அகற்றுவதற்கும் மந்திரங்கள் கூறப்பபட்டுள்ளன. மேதைமை பெறுவதற்கும் மந்திரங்கள் இருக்கின்றன. மேலும் இறுதி சடங்கு, முன்னோர்களுக்குப் பிண்டம் வைத்தல் பற்றிய பாடல்களும் இடம் பெற்றுள்ளன.

ஆண்மை சிறந்திட:-

  • “விடியலும், சூரியனும், என்னுடைய மந்திர வார்த்தைகளும், பிரஜாபதியின் அருளும் இவனுடைய சுறுசுறுப்பைத் தூண்டட்டும்.
  • மூலிகைச் செடிகளின் சாரம் அவனுக்கு எழுச்சியைத் தரட்டும். சூடேற்றப்பட்ட ஒரு பொருளைப் போல் அவன் கிளர்ச்சியடையும் போது அவனுடைய மூச்சுக் காற்று வெப்பமடையும்.
  • இந்திரன் அவனது ஆண்மையை மேம்படுத்தட்டும்.
  • அக்னியே, சவீதாவே, சரஸ்வதியே, அவனுடைய சக்தியை வில்லைப் போல் நல்ல நிலையில் வைத்திருங்கள்”

இந்தச் சம்கிதையில் உள்ள சூக்தங்களின் தலைப்புகளைக் கண்ணுற்றாலே அது எதைப் பற்றி எல்லாம் பேசியிருக்கிறது என்பதை அறிந்துக் கொள்ளலாம்.

சிகிச்சை, பிரசவம், சந்ததி, மின்னல், செல்வம், காமாலை, குஷ்டம், காய்ச்சல், பிரமசரியம், காதல், கிருமி நாசம், பகை அழி, வேள்வி தோஷம், வசிய வழி, ஆரோக்கியம், விஷம் நீக்குக் காப்பு, சிகிச்கை, கேடுங் குறையும், புன்செயல் (பிறர் செய்த செய்வினையை எதிர்த்து), புழு நாசம், தூக்கம், மக்கட் பேறு, தீர்க்காயுசு, வலிமை, கீழாக்கு (துன்பம் செய்பவனைக் காலால் மிதி) நஞ்சு, துன்பமழி, பலம், பயமின்மை, மருந்து, துண்டமாக்கு (பகைவர்களை மிதித்துவிடு), எதிரிகள், புகழ், உணவு, வீரியம், துரத்து, பெருகு பெருகு, இருமல், உன்மத்தம் (பைத்தியம்), கடன், எனக்கு (வசியம் விரும்பல்) கேசம் வளர, துச்சுவப்னம் (துஷ்டரை நீக்கு), அரியழி (பகை கொல்லு), விஷம் நீக்கு, துன்பம் நீங்கு, பாம்பு, சத்துரு சம்காரம், சாந்தம், பயமின்மை, மேதை.

.கா.ஈஸ்வரன்


Share this:

Related posts

“தல” தோனி திடீர் ஓய்வை அறிவிக்க காரணம் இவர்களா?… பரபரப்பு பின்னணி…!!

MANIMARAN M

இந்திய தத்துவம்-சிறிய அறிமுகம் : ரிக் வேத சம்கிதை

NEWSKADAI

இந்தியத் தத்துவம் சிறிய அறிமுகம் : பிராமணங்கள் – அ.கா.ஈஸ்வரன்

NEWSKADAI

நவீன நீர்வழிச்சாலைத் திட்டம் : தமிழகத்தைக் காக்க வேண்டிய கட்டம்…

NEWSKADAI

மின்னலால் இனி மரணமில்லை… இந்திய விஞ்ஞானிகளின் புதிய தொழில்நுட்பம்…!

NEWSKADAI

சிறுகதை : கண்காணிக்கப்படும் பட்டு – முனைவர்.ஆதன் குமார்

NEWSKADAI