Newskadai.com
தேர்டு ஐ

இந்திய தத்துவம் சிறிய அறிமுகம் : நான்கு வேதங்கள் குறித்து முக்கிய தகவல்கள்…!

Veda philosophy
Share this:

வேதங்கள் நான்காகும். ரிக், யசூர், சாமம், அதர்வணம் என்ற பெயர்களில் அவை அழைக்கப்படுகிறது. ஒவ்வொரு வேதமும் தம்முள்  சம்கிதை, பிராமணம், ஆரண்யம், உபநிடதம் என்கிற நான்கு உட்பிரிவுகைக் கொண்டுள்ளது. முதல் இரண்டும் கர்ம காண்டம் என்றும் பிறகுள்ள இரண்டும் ஞானக் காண்டம் என்றும் அழைக்கப்படுகிறது. கர்ம காண்டத்தை இறையியல் (Theology) என்றும் ஞானக் காண்டத்தைத் தத்துவவியல் (Philosophy) என்றும் பிரித்தறியப்படுகிறது.

vedham

நான்கு வேதங்களில் மிகப் பழமையானது ரிக் வேதம்.  மூவாயிரத்து ஐநூறு ஆண்டுகளுக்கு மேலாக வாய்வழியாகப் பாதுகாக்கப்பட்டது. சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தான் அது எழுத்து வடிவம் பெற்றது. இருந்தாலும் இன்றும் இதனைப் படிப்பவர்கள் பெரும்பாலும் வாய்வழியாகவே படிக்கின்றனர்.

நம் நாட்டில் வேதம் என்ற பெயரைக் கேட்டாலே பெருமைப்படுபவர்களில் எந்தனை பேர்களுக்கு வேதம் பற்றிய புரிதல் இருக்கிறது என்ற கேள்வி கேட்டால், கண்டிப்பாக எதிர்மறையான பதிலே அதிகம் கிடைக்கும். அதனால் வேதத்தைப் பற்றிச் சற்று விரிவாகவே இங்கே காண்போம்.

உபநிடதத் தத்துவங்களே இன்று இந்து மதத் தத்துமாகப் பேசப்படுகிறது. இந்த உபநிடதங்கள் ஒரே காலத்தில் தோன்றியவை அல்ல. சம்கிதைகள் தோன்றிய காலத்திற்கும் உபநிடதங்கள் தோன்றிய காலத்திற்கும் உள்ள இடைவெளியும் மிகவும் பெரியதாகும்.

கி.மு.1500 ஆண்டு அளவில் வாய் மொழிப் பாடல்களாக இருந்த ரிக்  வேதம் தொகுக்கப்பட்டது, அதற்குப் பிந்தைய காலத்தில் இதர வேதங்கள் தொகுக்கப்பட்டன. புத்தர் பிறப்புக்கு முன்பும் பின்பும் உபநிடதங்கள் தேன்றியது. அதாவது கி.மு. 5ஆம் நூற்றாண்டில் தோன்றியது. ஆக வேத சம்கிதைகளும் உபநிடதங்களும் ஒரே காலத்தில் தோன்றிடவில்லை. அது மட்டுமல்லாது பேசும் பொருளும் வேறுபடுகிறது. வேத சம்கிதையில் இயற்கையை உருவகப்படுத்தும் பாடல்களாகவே காணப்படுகிறது. அந்த உருவகங்கள் இறைவனாக முழுமைப் பெறவில்லை என்று கூறிடலாம். அதனால் தான் வேதத்தில் பேசப்பட்ட தேவர்கள் பிற்கால இந்து மதத்தில் கடவுளாகக் கொள்ளப்படவில்லை. அதிகம் பேசப்படும் இந்திரன் பிற்காலத்தில் இந்திர உலகத்தின் தலைவனாகவும் அதுவும் ஒரு பதவியின் பெயராகவும் சுருக்கப்பட்டுள்ளது.

பிற்காலத்தில் பிரதானக் கடவுளாகக் கொள்ளப்படுகிற நாராயணன், சிவபெருமான் போன்றோர்களைப் பற்றி வேதத்தில் பேசப்படவில்லை. பிற்காலங்களில் நாராயணனுடன் இணைக்கப்பட்ட விஷ்ணுவின் பாடல் வேதத்தில் இடம் பெற்றுள்ளது, வேத காலத்தில் விஷ்ணு முதன்மை பெற்று விளங்கவில்லை. அதாவது இந்திரன், அக்கினி, சோமன் அளவுக்குப் பேசப்படவில்லை. சிவபெருமானுடன் இணைக்கப்பட்ட ருத்திரன் பற்றிய பாடல்கள் வேதங்களில் இடம் பெற்றாலும், ருத்திரனை பிற சமூகத்தின் தேவனாகப் பேசப்பட்டுள்ளது. அதே போல் அருஉருவமான லிங்கத்தைச் சிஷ்ண தேவர் என்று இழிவாகக் கூறப்பட்டுள்ளது. வேதகாலத்தில் தேவர்களை உருவ வடிவில் ஏற்றுக் கொள்ளப்படவில்லை. பிற்காலங்களில் தான் இந்திரனுக்கும், அக்னிக்கும் உருவம் கொடுக்கப்பட்டது.

வேத சம்கிதைக்கும் உபநிடதங்களுக்கு இடையே கால இடைவெளியுடன் மொழி, கருத்து இடைவெளியும் இருக்கிறது. வேத சம்கிதையில் தத்துவக் கருத்துக்களைக் காணமுடியாது. ரிக் வேதத்தின் பத்தாவது மண்டத்தில் காணப்படும் பிற்சேர்க்கைப் பாடல்களில் தான் தத்துவம் பேசப்பட்டுள்ளது. வேத சம்கிதையில் இயற்கையையும் வீரத்தையும் உருவகப்படுத்தும் பாடல்களோடு, சமூகக் கருத்துக்கள் இங்கொன்றும் அங்கொன்றுமாகக் காணப்படுகிறது. எமன், எமி உரையாடல், எத்தகைய இறையியல் தொடர்பற்று, பழைய சமூகம் பற்றிய நினைவுகளைப் பாடியுள்ளது. அதே போல் சூதாட்டத்தில் ஈடுபட்டதைப் பற்றிய பாடல்களும், சம்கிதையில் இடம் பெற்றுள்ளது. ஈமச் சடங்குகளைப் பற்றிய குறிப்புகளும் காணப்படுகிறது.

vedham

வேதத்தின் இறுதிப் பகுதியாக உபநிடதங்கள் கூறப்பட்டாலும், வேத சம்கிதைகள், பிராமணங்கள் ஆகியவற்றில் கூறப்பட்ட பலியிடல் சடங்கு மற்றும் அவற்றின் பயன்களை மறுத்து, தத்துவப் போக்கிற்கு முதன்மை கொடுக்கின்ற கருத்துகளை, தொடக்கக் கால உபநிடதங்களில் காணப்படுகிறது. வேத சம்கிதையில் காணப்படும் சில கருத்துக்களுக்கு, பிற்கால உபநிடதங்களில் தத்துவ விளக்கம் கொடுக்கும் போக்கும் காணமுடிகிறது. குறிப்பாக “ஓம்” என்ற சொல்லைக் குறிப்பிடலாம். ஓம் என்கிற மந்திரத்தற்கும் உபநிடதத்தில் தத்துவ விளக்கம் கொடுக்கப்படுகிறது. இந்தப் போக்கே உபநிடதங்களில் மேலோங்கி இருக்கிறது.

தமது தத்துவங்களை உபநிடதங்களிலும், பிரம்ம சூத்திரத்தலும், பகவத்கீதையிலும் காணப்படுவதாக இந்து தத்துவ அறிஞர்கள் கருதினார்கள். அதனால் இந்த மூன்றையும் பிரஸ்தானத் திரயம் (முதன்மையான மூன்று) என்று இணைத்துக் கூறப்படுகிறது. எந்த இந்து தத்துவமாக இருந்தாலும் அதற்கான ஆதாரத்தை இந்த மூன்றில் இருந்து காட்டப்பட வேண்டும். அதனால் தான் இந்து தத்துவ அறிஞர்கள் இந்த மூன்றுக்கும் பாஷியங்கள் (விரிவுரைகள்) எழுதி தமது தத்துவத்தை நிலைநிறுத்தியுள்ளனர்.

– அ.கா.ஈஸ்வரன்


Share this:

Related posts

“தல” தோனி திடீர் ஓய்வை அறிவிக்க காரணம் இவர்களா?… பரபரப்பு பின்னணி…!!

MANIMARAN M

சிறுகதை : தண்ணீர் குடத்தில் பிறக்கிறோம்..!!

NEWSKADAI

மின்னலால் இனி மரணமில்லை… இந்திய விஞ்ஞானிகளின் புதிய தொழில்நுட்பம்…!

NEWSKADAI

மாணவர்களின் கல்வியில் கல்லைத் தூக்கிப் போட்ட மத்திய அரசு… புதிய கல்விக் கொள்கை 2020…!!

POONKUZHALI

ஒட்டுமொத்த நாடும் கொரோனாவுடன் போராடிக்கொண்டிருக்கிறது… ஆனால் முகேஷ் அம்பானி??

MANIMARAN M

சிறுகதை : “டாஸ்மாக் ஞானம்”..!?

NEWSKADAI