அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தின் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது. கடந்த சில வாரங்களாக தமிழகத்தின் பல பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. மதியவேளையில் லேசாக வெயில் தலைகாட்டினாலும், காலை, மாலை மற்றும் இரவு நேரங்களில் குளிர் காலம்
போல் உள்ளது. கொரோனாவால் வீட்டிற்குள் முடங்கி கிடக்கும் மக்களுக்கு ஜில்லென பெய்யும் மழை சற்றே ஆறுதலை கொடுத்துள்ளது.

சென்னை வானிலை மையம் அறிவித்துள்ள தகவலின் படி, திருப்பூர், ஈரோடு, உள்பட 7 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என அறிவித்துள்ளது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் பல்வேறு மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளது. சென்னையில் வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும், குறிப்பாக சென்னை புறநகர் பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் எனவும் அறிவித்துள்ளது.
சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல், சிவகங்கை, தென்காசி, மதுரை, குமரி, திருவண்ணாமலை, விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மிதமானது முதல் கனமான மழையும் பெய்யக்கூடும் என்றும், வட கடலோர தமிழக மாவட்டங்களான அரியலூர், புதுவை, பெரம்பலூர், திருச்சி, காரைக்கால் ஆகிய பகுதிகளில் லேசான மழைக்கும் வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.