கிரிக்கெட் வீரர் தோனியின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடித்ததன் மூலம் புகழ் பெற்றவர் சுஷாந்த் சிங் ராஜ்புட், ஒரே படத்தில் ஓஹோ என கிடைத்த பிரபலத்தால் பாலிவுட்டின் முன்னணி நடிகராக வலம் வந்தார். அடுத்தடுத்து வெற்றிப்படங்களை கொடுத்து வந்த அவர், மன அழுத்தம் காரணமாக ஜூன் 14ம் தேதி மும்பை பாந்த்ராவில் உள்ள தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்தியாவையே உலுக்கிய இந்த வழக்கில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
முதலில் பாலிட்டின் வாரிசு அரசியல் தான் சுஷாந்த் தற்கொலைக்கு காரணம் என கூறப்பட்டது. இதனையடுத்து பாலிவுட் பிரபலங்களான கரண் ஜோஹர், ஆலியா பட், சஞ்சய் லீலா பாஞ்சாலி, சல்மான் ஆகியோர் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது. சுஷாந்த் சிங் தற்கொலை தொடர்பாக இதுவரை 41 பேருக்கு மேல் விசாரணை நடைபெற்றுள்ள நிலையில், அதிரடி திருப்பமாக அவரது காதலியான ரியா சக்ரபர்த்தி மீது சுஷாந்தின் தந்தை கே.கே.சிங் பாட்னா காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
அதில் சுஷாந்தின் மரணத்திற்கு ரியா தான் காரணம் என்றும், அவருடைய வங்கி கணக்கில் இருந்து 150 கோடி ரூபாய் வரை மோசடி செய்துள்ளதாகவும் அடுக்கடுக்கடுக்கான குற்றச்சாட்டுக்களை முன்வைத்தார். இதையடுத்து உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்த ரியா, பாட்னாவில் பதிவு செய்யப்பட்டுள்ள வழக்கை மும்பையில் விசாரிக்கும் படி கோரியுள்ளார்.
அந்த வழக்கு விசாரணையில் உள்ள நிலையில், மும்பை வந்துள்ள குஜராத் போலீசார் தீவிர விசாரணையில் இறங்கியுள்ளனர். இதுகுறித்து விசாரணை அதிகாரியான வினய் திவாரி பேட்டி ஒன்றில், சுஷாந்த் மரணம் தொடர்பான ஆவணங்களை மும்பை போலீசாரிடம் கேட்டிருப்பதாகவும், ஆனால் அவர்கள் சரியாக ஒத்துழைக்கவில்லை என்றும் குற்றச்சாட்டியுள்ளார். இதுவரை ரியா சக்ரபர்த்தியை கைது செய்யும் எண்ணமில்லை என கூறியுள்ள அவர், தேவைப்பட்டால் காவலில் எடுத்து விசாரிக்க உள்ளதாக தெரிவித்துள்ளார்.