இசையுலகை தனது குரலால் ஆட்சி செய்த பிரபல பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியத்திற்கு கடந்த 5ம் தேதி கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து வீட்டிலேயே மருத்துவர்கள் தனிமைப்படுத்திக் கொள்ள அறிவுறுத்திய போதும், குடும்பத்தினர் தன்னை தனிமையில் விட்டு வருத்தப்படக்கூடாது என்பதற்காக மருத்துவமனையில் சேர்ந்தார். சென்னை சூளைமேட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் எஸ்.பி. பாலசுப்ரமணியத்திற்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
கடந்த 14ம் தேதி எஸ்.பி.பி.யின் உடல்நிலை கவலைக்கிடமான நிலைக்கு சென்றது. இதையடுத்து பல வதந்திகள் அப்போது பரவின. இதையடுத்து எஸ்.பி.பி.யின் உடல் நிலை குறித்து விளக்கமளித்த அவருடைய மகன் எஸ்.பி.பி.சரண், அப்பாவின் உடல்நிலை குறித்து வதந்திகளை பரப்ப வேண்டாம் என்றும், அவருடைய உடல் நிலை குறித்து தாங்களே தகவல் கொடுக்கிறோம் என்றும் தெரிவித்தார்.
இதையடுத்து தினந்தோறும் எஸ்.பி.பி. உடல் நிலை குறித்து வீடியோ வெளியிட்டு வருகிறார். நேற்று அவர் வெளியிட்ட வீடியோவில், அப்பா நேற்று இருந்த அதே கண்டிஷனில் தான் இருக்கிறார். ஆபத்தான நிலையை கடந்துவிட்டார். அதை மருத்துவர்கள் நல்ல அடையாளமாக பார்க்கிறார்கள். உங்களுடைய பிரார்த்தனைகள், வாழ்த்துக்களுக்கு நன்றி. தொடர்ந்து பிரார்த்தனை செய்யுங்கள் என கோரிக்கை விடுத்திருந்தார்.
சற்று நேரத்தில் மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்ட அறிக்கையில், எஸ்.பி.பி-யின் உடல் நிலை திடீரென கவலைக்கிடமாக உள்ளதாகவும், வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தது. இதனால் திரையுலகிலும், ரசிகர்கள் மனதிலும் மீண்டும் சோக இருள் சூழ்ந்துள்ளது. இந்நிலையில் எஸ்.பி.பி. அவர்களின் நிலை குறித்து மகன் எஸ்.பி.பி. சரண் சில நிமிடங்களுக்கு முன்பு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், அப்பாவின் உடல் நேற்று போலவே தொடர்ந்து இருக்கிறது. சிலர் அவர் வென்டிலேட்டரில் இல்லை என வதந்தி பரப்பி வருகின்றனர். ஆனால் அவர் தொடர்ந்து வென்டிலேட்டர் சப்போர்ட் உடன் சிகிச்சை பெற்று வருகிறார். உங்களுடைய பிரார்த்தனைகள் அவர் நலமுடன் திரும்ப உதவும். என தொடர்ந்து பிரார்த்தனை செய்யுங்கள். நீங்கள் அப்பா மீதும், எங்களுடைய குடும்பத்தின் மீதும் வைத்துள்ள அன்புக்கு நன்றி என குறிப்பிட்டுள்ளார்.