Newskadai.com
தேர்டு ஐ

புயலைக் கிளப்பும் (CAG) தலைமை கணக்கு தணிக்கை அதிகாரி நியமனம்.

Share this:

மத்திய கணக்கு தணிக்கைத் துறைப் பற்றியோ… அதன் தலைமை அதிகாரி CAG (Comptroller and Auditor General of India) பற்றியோ… சாதாரண மக்களுக்கு 2010 ஆம் ஆண்டுக்கு முன்புவரை தெரியாது. 2010 ஆம் ஆண்டில், மரண மாஸ் என்ட்ரி கொடுத்தார் தலைமை கணக்கு தணிக்கை அதிகாரி ( CAG ) வினோத் ராய்.

அன்று முதல் மத்திய கணக்கு தணிக்கை துறை பற்றி அறியாத இந்தியர் எவரும் இல்லை என்ற நிலை உருவானது. மத்திய அரசுக்கு எதிராக அப்போது அவர் வைத்தக் குற்றச்சாட்டு உலகையே திரும்பி பார்க்க வைத்தது. 2ஜி ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஒதுக்கீட்டில் ஊழல் நடந்திருப்பதாகவும், அதனால் அரசுக்கு ஒரு லட்சத்து எழுபத்தி ஆறாயிரத்து முன்னூற்று எழுபத்தி ஒன்பது (₹ 1,76,379) கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டிருப்பதாகவும் கூறினார். இந்திய அரசியலில் மாபெரும் சுனாமியாய் சுழன்று அடித்தது இந்த குற்றச்சாட்டு.

மத்தியில் ஆட்சியில் இருந்த மன்மோகன் சிங் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு மண்ணை கவ்வுவதற்கும், எதிர்கட்சியாய் இருந்த பாஜக, மத்தியில் ஆட்சியைப் பிடிப்பதற்கும் தலைமை கணக்கு தணிக்கை அதிகாரியின் ( CAG) இந்த ஒற்றை அறிக்கையே காரணமென்றால் அது மிகையல்ல. ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில் அங்கம் வைத்த திமுகவும் தமிழகத்தில் ஆட்சியைப் பறிகொடுத்தது.

2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் திமுக வின் அ.ராசா மற்றும் கனிமொழி இருவரும் முக்கிய குற்றவாளியாக கருதப்பட்டனர். உச்ச நீதிமன்ற நேரடி கண்காணிப்பில் நடந்த நீதி விசாரணை, சிபிஐ விசாரணை, நாடாளுமன்ற பொது கணக்குழு, சிறப்பு நீதிமன்றம் என பல மட்ட, பல கட்ட விசாரணைகளுக்கு பிறகு, “CAG யின் குற்றச்சாட்டில் உண்மை இல்லை. ஒரு லட்சத்து எழுபத்தி ஆறாயிரத்து முன்னூற்று எழுபத்தி ஒன்பது (1,76,379) கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டிருப்பதாக குற்றம் சாட்டிய மத்திய கணக்கு தணிக்கை அதிகாரி , ஒப்புக் கொள்ளப்பட்ட ஒரு சான்றைக் கூட நீதிமன்றத்தில் வைக்கவில்லை” என்று கூறிய சிறப்பு நீதிமன்றம் 2ஜி வழக்கில் முக்கிய குற்றவாளியாக குற்றம் சுமத்தப்பட்ட அ.ராசா, கனிமொழி ஆகிய இருவரையும், 21 டிசம்பர் 2017-ல் விடுதலை செய்தது.

ஆதாரமில்லாமல் ஊழல் குற்றச்சாட்டை சுமத்திய CAG வினோத் ராய்க்கு எந்தவிதமான தண்டனையும் இல்லை. ஆனால் இந்த ஊழல் குற்றச்சாட்டால் அன்று விழுந்த காங்கிரஸ் கட்சி இன்றுவரை எழ முடியவில்லை. 2010-க்கு பிறகு, தலைமை கணக்கு அதிகாரி மூச்சு விடுவதே இல்லை. பாஜக ஆட்சியில் எல்லாம் நல்லபடியாக நடக்கிறது போலும். இத்தகைய பவர்புள்ளான CAG பதவிக்கு தற்போது மத்திய அரசு நியமித்திருக்கும் மன்னிக்கவும், குடியரசு தலைவர் நியமித்திருக்கும் அதிகாரி தான் G.C.முர்மு.

யார் இந்த முர்மு….?

தற்பொழுது பிரதமராக இருக்கும் நரேந்திர மோடி, குஜராத் முதல்வராக இருந்தபொழுது குஜராத்தின் தலைமை செயலாளராக பதவி வகித்தவர். மோடியின் நம்பிக்கைக்கு உரியவர். மோடி சொல்வதை கண்ணை மூடிக்கொண்டு செயல்படுத்தும் செயல்வீரர். குஜராத் முதல்வராக இருந்த மோடி, இந்திய பிரதமர் ஆனதும், இவர் மத்திய நிதித் துறை செயலாளராக அமர்த்தப்பட்டார். 2019 ஆகஸ்ட்டில் காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை பறித்து அதை இரண்டு யூனியன் பிரதேசங்களாக துண்டுப் போட்ட மத்திய அரசு, பிரச்சனைக்குரிய ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தை கட்டி ஆளும் துணை நிலை ஆளுநராக முர்முவை நியமித்தது. காஷ்மீரில் என்ன நடக்கிறது என்று மத்தியில் ஆள்பவர்களை தவிர, வேறு எவருக்கும் தெரியாத வகையில் அடிப்படை பேச்சுரிமை, கருத்துரிமைக்கு கூட இடம் கொடுக்காமல், ஒரு இராணுவ ஆட்சியாளரைப் போல இரும்பு கரம் கொண்டு ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தை நிர்வகித்து வந்தார்.

இத்தகைய சிறப்பு வாய்ந்த G.C.முர்மு தான், இன்று இந்திய தலைமை கணக்கு தணிக்கை அதிகாரியாக நமது குடியரசு தலைவரால் நியமனம் செய்யப்பட்டிருக்கிறார். இந்த பதவியின் காலம் ஐந்தாண்டுகள். இப்பொழுது 60 வயதில் இருக்கும் G.C.முர்மு இன்னும் முழுமையாக ஐந்தாண்டுகள் அந்த பதவியில் நீடிப்பார். CAG அலுவலக அதிகாரிகள் மத்தியிலும் பெரும் புயலை கிளப்பியிருக்கிறது இந்த நியமனம். தகுதி, சீனியாரிட்டி எதையும் கருத்தில் கொள்ளாமல் இந்த நியமனம் நடைபெற்றிருப்பதாக பல மூத்த அதிகாரிகள் குமுறிக் கொண்டு இருக்கின்றனர்.


Share this:

Related posts

பிரசாந்த் பூஷன்: ஒரு ரூபாய் அபராத வழக்கின் ஒப்புதல் வாக்குமூலம்..!!

NEWSKADAI

மின்னலால் இனி மரணமில்லை… இந்திய விஞ்ஞானிகளின் புதிய தொழில்நுட்பம்…!

NEWSKADAI

மற்றொரு போபால் பேரழிவுக்கு திட்டமிடுகிறதா மத்திய அரசு?… கந்த சஷ்டி மடை மாற்றம் இதுக்குத் தானா?

NEWSKADAI

இந்தியத் தத்துவம் சிறிய அறிமுகம் : ஆரண்யகங்கள் – அ.கா.ஈஸ்வரன்

NEWSKADAI

சிறுகதை : கண்காணிக்கப்படும் பட்டு – முனைவர்.ஆதன் குமார்

NEWSKADAI

இந்தியத் தத்துவம் – சிறிய அறிமுகம் : நாசதீய சூக்தம்

NEWSKADAI