தமிழகத்திலிருந்து ரஷ்யா, மாஸ்கோவில் வோல்கோகிராடு மருத்துவ கல்லூரியில் மருத்துவ படிப்பு படிக்கச் சென்றிருந்த நான்கு மாணவர்கள் வோல்கா நதியில் மூழ்கி உயிரிழந்தனர். வோல்கா நதிக்கு விடுமுறையைக் கொண்டாட நண்பர்களுடன் சென்றபொழுது இந்த நால்வரும் நதியில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். சென்னையைச் சேர்ந்த ஸ்டீபன், தாராபுரத்தைச் சேர்ந்த முகமது ஆஷிக், திட்டக்குடியைச் சேர்ந்த ராமு விக்னேஷ், சேலத்தைச் சேர்ந்த மனோஜ் ஆனந்த் ஆகிய தமிழக மாணவர்கள் அவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தாராபுரம் சொக்கநாதப் பாளையத்தில் வசித்து வரும் முகமது ஆஷிக்குடைய தந்தை முகமது ரபீக் கூறுகையில், “எனது மகன் மருத்துவ கனவோடு ரஷ்யா சென்று இறுதியாண்டு படித்து வந்தார். எனது மகனுடைய சடலத்தை இந்தியா கொண்டுவர மாநில அரசு ஏற்பாடு செய்ய வேண்டும்” என்று கோரிக்கை வைத்துள்ளர். மனோஜ் ஆனந்துடைய தந்தை சப்-இன்ஸ்பெக்டர் ஆனந்தன் முதல்வர் எடப்பாடி பழனிசாமியைச் சந்தித்து மகன் மற்றும் அவரது நண்பர்களின் சடலங்களை இந்தியா கொண்டு வர நடவடிக்கை எடுக்குமாறு பெற்றோர்கள் சார்பாக கேட்டுக் கொண்டுள்ளார்.