கடந்த இரண்டு வாரங்களாக தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் பல்வேறு மாவட்டங்களிள் உள்ள அணைகள் நிரம்பி வருகின்றன. இந்த வருடத்தின் விவசாய தேவைக்கு போதுமான அளவு தண்ணீர் உள்ளதால் விவசாயிகள் பெரும் மகிழ்ச்சி அடைந்து வருகிறார்கள். இந்த நிலையில் ஈரோடு மாவட்டத்தின் முக்கிய நீராதாரமாக அமைந்துள்ள பவானிசாகர் அணையின் நீர்மட்டம் கடந்த சில நாட்களாக நிரம்பி வருகிறது.
நீர்ப்பிடிப்பு பகுதியான வட கேரளா மற்றும் நீலகிரி மலைப்பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் அங்கிருந்து வரும் நீரானது பவானி மற்றும் மாயாற்று அணையை நோக்கி செல்கிறது. இதனால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு அனையின் நீர்மட்டம் அதி வேகமாக உயர்ந்து வருகிறது. மேலும் பவானிசாகர் அணையின் நீர்மட்ட கொள்ளளவு 102 அடியாக உள்ள நிலையில், இன்றைய நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 101.10 அடியாக நிரம்பி உள்ளது. அணையின் தண்ணீர் இருப்பு நிலை 29.5 டிஎம்சி ஆக உள்ளது. அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 5,644 கன அடியாக வரும் நிலையில் அணையிலிருந்து வினாடிக்கு 1,200 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது.

மேலும் 101 அடியை எட்டியதை தொடர்ந்த எந்த நேரத்திலும் அணையின் கொள்ளவான 102 அடியை தொட்டுவிடும் என்பதால் கரையோர வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மிகவும் தாழ்வான பகுதியில் உள்ள மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. அதோடு பவானி ஆற்றங்கரையோரம் வசிக்கும் மக்களுக்கும் ஒலிபெருக்கி மூலம் வெள்ள அபாய எச்சரிக்கை விடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.