இந்தியாவில் தினமும் அதிகரித்து வரும் கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் தீவிர நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றன. கொரோனா 2வது அலை தீவிரம் அடைந்து வருவதால், பிரதமர் மோடி அவ்வப்போது மருந்துவ நிபுணர்கள், அதிகாரிகள், அனைத்து மாநில முதலமைச்சர்களுடன் காணொலி காட்சி வாயிலாக ஆலோசனை நடத்தி வருகிறார். கொரோனா பரவல் குறைவாக உள்ள மாநில முதலமைச்சர்களுடன் தொலைபேசி வாயிலாகவும் பிரதமர் ஆலோசனை நடத்தி வருகிறார்.
சமீபத்தில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்து ராஜஸ்தான், சத்தீஸ்கர், உத்திரப்பிரதேசம், புதுச்சேரி மாநில முதல்வர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி காணொலி காட்சி வாயிலாக ஆலோசனை நடத்தினார். இன்று பாதிப்பு அதிகமுள்ள 9 மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் மோடி காணொலி காட்சி வாயிலாக ஆலோசனை நடத்தினார்.
கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து நடைபெற்ற இந்த ஆலோசனை கூட்டத்தில் முதன் முறையாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றார். இந்த கூட்டத்தில் அவருடன் சென்னை மாநகராட்சி ஆணையர் ககன் தீப் சிங், தலைமைச் செயலாளர் இறையன்பு, முதன்மைச் செயலாளர் உதயச்சந்திரன் ஆகியோரும் பங்கேற்றுள்ளனர். கர்நாடகா, உத்திரப்பிரதேசம், தமிழகம் உள்ளிட்ட 9 மாநில முதலமைச்சர்கள் பங்கேற்ற இந்த கூட்டத்தில் அனைத்து மக்களுக்கும் கட்டாயம் கொரோனா தடுப்பூசி செலுத்த வேண்டுமென பிரதமர் மோடி அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது. மேலும் ஆக்ஸிஜன் கையிருப்பு, கொரோனா தடுப்பு மருந்து, கட்டுப்பாடுகள் உள்ளிட்டவை குறித்தும் ஆலோசனை கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டுள்ளது.