திருவனந்தபுரத்தில் உள்ள கேரள தலைமை செயலக அறை ஒன்றில் நேற்று மாலை 5 மணியளவில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. தகவலறிந்த தீயணைப்பு வீரர்கள் உடனடியாக விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். இந்த திடீர் தீ விபத்தில் சில கோப்புகள், பத்திரங்கள், கணிப்பொறி உள்ளிட்டவை எரிந்து விட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மின்கசிவால் இந்த விபத்து நடைபெற்றிருக்கலாம் என செய்திகள் தெரிவிக்கின்றன.
நாட்டையே பரபரப்புக்குள்ளாக்கிய கேரள தங்கக் கடத்தல் வழக்கை தேசிய விசாரணை முகமை விசாரித்து வருகின்றது. இந்த வழக்கில் தொடர்புடைய கோப்புகளை ஒப்படைக்குமாறு கேட்டிருந்த நிலையில் இந்த திடீர் தீ விபத்து நடந்துள்ளது. கேரள ஆளும் கட்சியினர் வேண்டுமென்றே இந்த தீ விபத்து நாடகத்தை நடத்தி தங்க கடத்தல் வழக்கின் முக்கிய ஆவணங்களை அழிக்க திட்டமிட்டிருக்கிறது என்று எதிர்கட்சிகளான காங்கிரஸ் பாஜக குற்றம் சாட்டி வருகின்றன.
இதனையடுத்து கேரள தலைமை செயலகம் எதிரே இரண்டு எதிர்க்கட்சியினரும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அந்த ஆர்ப்பாட்டத்தின்போது சிலர் தலைமைச் செயலகத்திற்குள் உள்ளே திடீரென நுழைய முற்பட்டபோது, போலீஸார் தடியடி நடத்தியதால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இது குறித்து காங்கிரஸ் தலைவர் ரமேஷ் சென்னிதலா கூறுகையில், கேரள தலைமைச் செயலகத்தில் ஏற்பட்ட தீ, தங்கக் கடத்தல் வழக்கு தொடர்பான முக்கிய ஆதாரங்களை அழிப்பதற்கான சதி வேலை என்றும், முதல்வர் அலுவலகத்தின் முதன்மைச் செயலாளருக்குத் தங்கம் கடத்தலில் தொடர்பு இருப்பதால், முதல்வர் பினராயி விஜயனிடமும் விசாரணை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தி கூறியுள்ளார்.