கடலூர் மாவட்டம் இடைநாறூர் கிராமத்தில் பட்டாசு தொழிற்சாலை ஒன்றில் இன்று பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. அந்த தீ விபத்தில் சிக்கி 7 பேர் உடல் கருகி உயிரிழந்துள்ளனர். கொரோனா பெரும் முடக்கத்திற்கு பின் பல தளர்வுகளுடன் வணிக நிறுவனங்கள், தொழிற்சாலைகள் இயங்க அரசு அனுமதியளித்துள்ளது. இந்நிலையில் காட்டுமன்னார்குடி அருகே உள்ள இடைநாறூர் என்ற கிராமத்தில் பத்துக்கும் அதிகமான பட்டாசு தயாரிக்கும் சிறு சிறு பட்டாசு தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன.
இதில் காந்திமதி என்பவருக்கு சொந்தமான தயாரிப்பு ஆலையில் திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. கொரோனா ஊரடங்கிற்கு பிறகு காந்திமதி ஆலைக்கு பணிக்கு வந்த 9 பேர் இந்த தீ விபத்தில் சிக்கினர். இதில் சம்பவ இடத்திலேயே 5 பேர் பலியானார்கள். படுகாயமடைந்த நால்வரை திருச்சி மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அதில் இருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். பட்டாசு தயாரிப்பு ஆலை உரிமையாளர் காந்திமதி அவரது மகள் லதா, அதே பகுதியைச் சேர்ந்த ரெத்தினாம்பாள், மலர்கொடி, ராசாத்தி உள்ளிட்ட 7 பேர் உயிரிழந்துள்ளனர்.
இருவருக்கு திருச்சி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீ அபினவ் இந்த சம்பவம் குறித்த விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார்.இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார். உயிரிழந்த 7 பெண்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் நிதியுதவி வழங்கவும் உத்தரவு பிறப்பித்துள்ளார்.