கொரோனா தொற்றின் தீவிரம் திரைப்பிரபலங்களையும் சும்மா விடவில்லை. லாக்டவுன் காரணமாக ஷூட்டிங்கில் வீட்டிற்குள் முடங்கி கிடக்கும் நிலையிலும், பலரும் கொரோனா தொற்றால் அதிகமாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். பாலிவுட்டின் முன்னணி நடிகரான அமிதாப் பச்சன் தொடங்கி கோலிவுட்டின் டாப் ஹீரோவான விஷால் வரை பலரும் கொரோனா தொற்றுக்கு ஆளாகி வருகின்றனர். அந்த வரிசையில் தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி இளம் நடிகை ஒருவரும் சேர்ந்திருப்பது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
டார்லிங், வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன், மரகத நாணயம் உள்ளிட்ட பல ஹிட் படங்களில் நடித்தவர் நடிகை நிக்கி கல்ராணி. லாக்டவுன் காரணமாக வீட்டில் இருக்கும் அவர், தனக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அவரே தனது சோசியல் மீடியா பக்கத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், கடந்த வாரம் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் எனக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. எனது அனுபவங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். நல்லவேலையாக எனக்கு லேசான தொற்று மட்டுமே உள்ளது. தொண்டை வலி, காய்ச்சல், வாசனை மற்றும் சுவை இழப்பு போன்ற அறிகுறிகள் தென்பட்டன. தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டதால் குணமடைந்து வருகிறேன். வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டதை அதிர்ஷ்டமாக நினைக்கிறேன்.
இது நமக்கு மிகவும் மோசமான நேரம். நம்முடைய பாதுகாப்பை போலவே பிறருடைய பாதுகாப்பை பற்றியும் சிந்திக்க வேண்டும். எனக்கு வயது குறைவு என்பதால் விரைவில் குணமடைந்துவிடுவேன். ஆனால் எனது பெற்றோர்கள், பெரியவர்கள், நண்பர்களைப் பற்றி யோசிக்கும் போது பயமாக இருக்கிறது. அதனால் கட்டாயம் முகக்கவசம் அணியுங்கள், சமூக இடைவெளியை கடைபிடியுங்கள், கைகளை அடிக்கடி கழுவுங்கள்.
மாதக்கணக்கில் வீட்டில் உட்கார்ந்திருப்பது வெறுப்பாக இருக்கும் என எனக்கும் தெரியும், ஆனால் இந்த நேரத்தை குடும்பத்துடன் செலவிடுங்கள். நண்பர்களுடன் தொடர்பில் இருங்கள்.மனதை ஆரோக்கியத்துடன் வைத்திருங்கள். மன சோர்வு அல்லது அழுத்தம் ஏற்பட்டால் தயவு செய்து பிறரிடம் உதவி கேளுங்கள். வீட்டிலேயே பாதுகாப்பாக இருங்கள் என குறிப்பிட்டுள்ளார்.