கோரதாண்டவம் ஆடும் கொரோனா பெருந்தோற்றைக் கட்டுப்படுத்தும் விதமாக தமிழகம் முழுவதும் மே 24ம் தேதி வரை முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் கொரோனா நெருக்கடி காலத்தில் பாதிக்கப்படும் மக்களுக்காக கொரோனா நிவாரண நிதியாக ரூ.4000 வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. ரேஷன் அரிசி அட்டைதாரர்களுக்கு கடந்த 15ம் தேதி முதல் இதற்கான முதல் தவணையாக ரூ.2000 வழங்கப்பட்டு வருகிறது. மேலும் புதிய ரேஷன் அட்டைதாரர்களுக்கும் ரூ.2 ஆயிரம் வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில் பதிவுபெற்ற மற்றும் பதிவுபெறாத தொழிலாளர்கள், அமைப்பு சாரா தொழிலாளர்கள் உள்ளிட்ட அனைத்துத் தொழிலாளர்களுக்கும் நிவாரண உதவித் தொகை வழங்கிட வேண்டுமென எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். தினக்கூலிகள், ஆட்டோ மற்றும் டாக்ஸி ஓட்டுநர்கள், முடி திருத்துவோர், தீப்பெட்டி மற்றும் பட்டாசு தொழிலாளர்கள், நடைபாதை வியாபாரிகள், கைத்தறி மற்றும் விசைத்தறி தொழிலாளர்கள், கட்டுமானம் மற்றும் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு இலவச மளிகை பொருட்களும், நிவாரணத் தொகையாக மாதம் ரூ.2 ஆயிரமும் வழங்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளார்.

கடந்த முறை அதிமுக ஆட்சியில் இருந்த போது மேற்கூறிய தொழிலாளர்களுக்கு நிவாரண உதவித் தொகை மற்றும் சிறப்பு உணவுத் தொகுப்பினை வழங்கியதை சுட்டிக்காட்டியுள்ள எடப்பாடி பழனிசாமி. ஆனால் இந்த முறை முழு ஊரடங்கை அமல்படுத்தியுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு அவர்களுக்கு எவ்வித நிவாரணத்தையும் அறிவிக்கவில்லை என்றும், உடனடியாக 2 ஆயிரம் ரூபாய் மற்றும் சிறப்பு உணவுத் தொகுப்பினை கொரோனா நிவாரணமாக வழங்கிட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.