பாலிவுட்டை பொறுத்தவரை இந்த ஆண்டு பொல்லாத ஆண்டாக மாறி வருகிறது. இந்தி திரையுலகின் ஜாம்பவான்களான இர்பான் கான், ரிஷி கபூரைத் தொடர்ந்து இளம் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட்டின் தற்கொலை பல சர்ச்சைகளை உருவாக்கி வருகிறது. மற்றொருபுறம் கொரோனா தொற்றும், அதனால் திரைப்பிரபலங்கள் சிகிச்சைக்காக அனுமதிக்கப்படுவதும் தொடர்ந்து வருகிறது. அந்த வரிசையில் பிரபல இயக்குநர் ஒருவரின் மரணம் பிரபலங்களை புரட்டி போட்டுள்ளது.
“தோம்பிவாலி ஃபாஸ்ட்” என்ற படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் நிஷிகாந்த் காமத் (50). தமிழில் மாதவனை வைத்து “எவனோ ஒருவன்”, மலையாளத்தில் சூப்பர் ஹிட் படமான “த்ரிஷயம்” படத்தின் இந்தி ரீமேக் என பல படங்களை இயக்கி வெற்றி கண்டவர். கொரோனா லாக்டவுனுக்கு பிறகு அபிஷேக் பச்சனை வைத்து சனக் என்ற படத்தை இயக்கவிருந்தார். இந்நிலையில், நிஷிகாந்துக்கு சமீபத்தில் மஞ்சள் காமாலையால் பாதிக்கப்பட்டுள்ளார்.
இதையடுத்து கடந்த ஜூலை மாதம் 31ம் தேதி ஐதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு கல்லீரல் பிரச்சனை இருப்பது கண்டறியப்பட்டது. ஏற்கனவே அவருக்கு அந்த பிரச்சனை இருந்து சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் மீண்டும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
நிஷி காமந்த் நிச்சயம் மீண்டு வந்துவிடுவார் என ரசிகர்கள் எதிர்பார்த்து பிரார்த்தனை செய்தனர். ஆனால் இன்று காலை சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்ததாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதனால் சோகத்தில் மூழ்கிய ரசிகர்களும், திரையுலகினரும் நிஷிகாமந்த் மரணத்திற்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர். கடைசியாக இவர் இந்தியில் “தர்பர்” என்ற படத்தை இயக்கி வந்தது குறிப்பிடத்தக்கது.