Dream11 IPL 2020 தொடரின் 41 ஆவது லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியில் ரோஹித் சர்மா காயம் காரணமாக இடம் பெறவில்லை. சிஎஸ்கே அணியில் ஷேன் வாட்சன், கேதர் ஜாதவ், பியுஷ் சாவ்லா நீக்கப்பட்டு, அவர்களுக்கு பதில் ருதுராஜ் கெயிக்வாட், ஜெகதீசன், இடம் பெற்றனர். டாஸ் ஜெயித்த மும்பை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய சிஎஸ்கே அணிக்கு ட்ரென்ட் போல்ட் வீசிய முதல் ஓவரிலேயே அதிர்ச்சி காத்திருந்தது.
ருதுராஜ் கெயிக்வாட் 5 பந்துகளை சந்தித்து டக் அவுட் ஆகி வெளியேறினார். பும்ரா வீசிய 2வது ஓவரில் அம்பதி ராயுடு ஆட்டமிழந்தார். அடுத்து 3வது ஓவரில் பாப் டுபிளெசிஸ், ஜெகதீசன் ஆட்டமிழந்தனர். சிஎஸ்கே அணி 3 ரன்களுக்கு 4 விக்கெட்களை இழந்து தவித்தது. அதைத் தொடர்ந்து விக்கெட்கள் வீழ்ந்த வண்ணம் இருந்தது . ஆனால், சாம் கர்ரன் மட்டும் தன் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
தோனி, ஜடேஜா உள்ளிட்ட வீரர்கள் கூட சிஎஸ்கே அணியை கைவிட்ட நிலையில் சாம் கர்ரன் தனி ஆளாக நின்று போராடினார். போராட்டத்தை வெளிப்படுத்தினார். பின் வரிசை வீரர்களுடன் இணைந்து அவர் அரைசதம் கடந்தார். 47 பந்துகளில் 52 ரன்கள் எடுத்தார். தாஹிர் பெரிய பேட்டிங் ரெக்கார்டு இல்லாத வீரர். எனினும், கர்ரனுக்கு ஒத்துழைத்து ஆடினார். அவர் 10 பந்துகளில் 13 ரன்கள் எடுத்தார்.சாம் கர்ரன் – இம்ரான் தாஹிர் ஜோடி 9 அது விக்கெட்டுக்கு 43 ரன்கள் சேர்த்தனர்.
ஐபிஎல் வரலாற்றில் 9வது விக்கெட்டுக்கு அதிக ரன் சேர்த்த ஜோடி என்ற சாதனை படைத்தனர். 20 ஓவர் முடிவில் சிஎஸ்கே அணி 114 ரன்கள் மட்டுமே எடுத்தது. மும்பை அணியின் வேகப்பந்துவீச்சாளர் ட்ரென்ட் போல்ட் பந்துவீச்சு மிகச் சிறப்பாக இருந்தது. அவர் 4 ஓவர்களில் ஒரு மெய்டன் ஓவர் வீசி 18 ரன்கள் கொடுத்து 4 விக்கெட்கள் வீழ்த்தினார்.
115 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணி தொடக்க வீரர்கள் இஷான் கிஷன் மற்றும் டி காக் ஜோடி 12.2 ஓவர்களிலேயே ஆட்டத்தை முடித்து வைத்தனர். இஷான் கிஷன் 68 ரன்கள், டி காக் 46 ரன்கள் எடுத்து மும்பை இந்தியன்ஸ் அணியின் வெற்றியை உறுதி செய்தனர்.விக்கெட் இழப்பில்லாமல்12.2 ஓவர்களில் வெற்றி இலக்கை எட்டியது. சிஎஸ்கே அணி படுதோல்வி அடைந்தது.