தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்துவதற்காக தமிழக அரசு பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதில் முக்கியமான நடவடிக்கையாக மக்கள் ஒன்று கூடுவதை தவிர்க்கும் விதமாக கடந்த மார்ச் மாதம் முதலே ஊரடங்கு நடவடிக்கைகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. கடும் லாக்டவுன் நடைமுறைகள் பின்பற்றப்பட்டு வந்த நிலையில், மக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு ஆகஸ்ட் 31ம் தேதி வரை பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டன.
அதேபோல் இ-பாஸ் நடைமுறையால் மக்கள் மற்றும் வியாபாரிகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்தன. இதையடுத்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இ-பாஸ் நடைமுறைகளில் பல தளர்வுகளை அறிவித்தார். இதனால் மக்கள் மாவட்டம் விட்டு மாவட்டம் சென்று வரும் நடவடிக்கை எளிமையாக்கப்பட்டது. லாக்டவுன் நேரத்தில் அதிக அளவிலான மக்கள் பொது நிகழ்ச்சிகளில் கூட தடை விதிக்கப்பட்டுள்ளது. இதை மீறி குடும்ப விழாக்கள், அரசியல் கட்சி நிகழ்வுகளை நடத்துவோர் மீது கடும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
சில நாட்களுக்கு முன்பு கோவை வந்த முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி அண்ணாமலைக்கு கட்சியின் நிர்வாகிகள், தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். தற்போது ஊரடங்கு விதிமுறைகள் அமலில் இருக்கும் போது அண்ணாமலைக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது தவறு. அதனால் ஊரடங்கை மீறி ஒன்று கூடியதாக அண்ணாமலை, கோவை மாவட்ட பாஜக தலைவர் நந்தகுமார், மாநில பொதுச்செயலாளர் ஜி.கே.செல்வகுமார், மாநில பொருளாளர் எஸ்.ஆர்.சேகர், மாநில துணை தலைவர் கனகசபாபதி உள்ளிட்டோர் மீது சட்ட விரோதமாக கூடுதல் உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் கோவை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
அதேபோல் நேற்று அதிமுக முன்னாள் மாவட்ட செயலாளரும், முன்னாள் எம்.பி.யுமான லட்சுமணன் ஆதரவாளர்கள் திமுகவில் இணையும் நிகழ்ச்சி நேற்று விழுப்புரத்தில் நடைபெற்றது. திமுக மத்திய மாவட்ட செயலாளர் பொன்முடி தலைமையில், கலைஞர் அரங்கில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். ஊரடங்கு விதிமுறைகளை மீறி, 144 தடை உத்தரவை மதிக்காமல் செயல்பட்டதாக பொன்முடி, முன்னாள் எம்.பி.லட்சுமணன் உள்ளிட்ட 317 பேர் மீது 5 பிரிவுகளின் கீழ் விழுப்புரம் தாலுக்கா போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். கூட்டணி கட்சியான பாஜக, தேமுதிக தலைவர்கள் மீதே ஊரடங்கை மீறியதாக போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.