தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் உடல் நிலை சரியில்லாத காரணத்தால் கடந்த சில ஆண்டுகளாகவே பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்பதை தவிர்த்து வருகிறார். சமீபத்தில் சட்டமன்ற தேர்த பிரச்சாரத்தின் போது கூட பேசாமல் தான் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
இந்நிலையில் கடந்த 19ம் தேதி அதிகாலை 3 மணி அளவில் திடீர் மூச்சுத்திணறல் ஏற்பட்டதால் விஜயகாந்த் சென்னையில் உள்ள மியாட் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. ஆனால் தேமுதிக வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிக்கையில், வழக்கமான பரிசோதனைக்காக கேப்டன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், அவர் நல்ல உடல் நிலையுடன் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது. மேலும் ஓரிரு நாட்களில் அவர் வீடு திரும்புவார் என்றும் தெரிவிக்கப்பட்டது.
இதனிடையே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கேப்டன் விஜயகாந்திற்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட நிலையில், பரிசோதனை முடிவுகள் நெகட்டிவ் என வந்தது தேமுதிகவினரை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. கடந்த 2 தினங்களாக மியாட் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த தேமுதிக பொதுச்செயலாளர் பூரண நலமடைந்து சற்று நேரத்திற்கு முன்பு வீடு திரும்பியுள்ளார். இதனால் தேமுதிக தொண்டர்கள் மட்டற்ற மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.