தனுஷ் நடிப்பில் வெளியான “காதல் கொண்டேன்” திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் இயக்குனர் செல்வராகவன். திரை இயக்கத்தில் தனக்கென்ற தனித்துவமான திறமையைக் கையாண்டு சிறந்த இயக்குனர் என்ற பெயரை உருவாக்கிக் கொண்டவர். இவரது முதல் படம் காதல் கொண்டேன் தமிழ் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. அதைத் தொடர்ந்து செல்வராகவன் இயக்கிய “7ஜி ரெயின்போ காலனி”, “புதுப்பேட்டை”, “ஆயிரத்தில் ஒருவன்”, “மயக்கம் என்ன”, “இரண்டாம் உலகம்” சமீபத்தில் வந்த “என்.ஜி.கே” வரை அனைத்தும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.
இயக்குனராக வலம் வந்த செல்வராகவன் “சாணிக் காயிதம்” என்ற திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமாகவுள்ளார். ஸ்கிரீன் சீன் நிறுவனம் தயாரிக்கும் சாணிக் காயிதம் திரைப்படத்தை அருண் மாதேஸ்வரன் இயக்குகிறார். சுதந்திரத் தினத்தன்று செல்வராகவன் தனது ட்விட்டர் பக்கத்தில் சாணிக் காயிதம் படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளார்.
ஆக்ஷன், க்ரைம் நிறைந்த திரைக்கதையைக் கொண்டது சாணிக் காயிதம் என்றும் நடிகை கீர்த்தி சுரேஷ் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாகவும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. நடிகராக அறிமுகமாகும் செல்வராகவனுக்கு அவருடைய தம்பியும், பிரபல நடிகருமான தனுஷ் வாழ்த்து கூறியுள்ளார். உங்கள் நடிப்பின் திறமையை நான் பார்த்தது போல் இந்த உலகமும் பார்க்கட்டும் செல்வா சார் என ட்வீட் செய்துள்ளார். தமிழ் சினிமாவில் நடிப்பு அசுரன் என பெயர் வாங்கி தம்பி தனுஷை செல்வராகவன் நடிப்பில் ஓவர் டேக் செய்வாரா? என பார்க்க ஒட்டுமொத்த கோலிவுட்டும் காத்துக்கிடக்கிறது.