கடந்த சில நாட்களாக சென்னையில் கொரோனா பாதிப்பு குறைந்து வருவதாக சுகாதாரத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் சூழலில் மற்ற மாவட்டங்களை காட்டிலும் சென்னையில் நோயின் தாக்கம் அதிகமாக உள்ளது. எனினும் தமிழகத்தில் நாளொன்றின் பாதிப்பு 30 ஆயிரத்தை தாண்டி பதிவாகியுள்ளது. அதில் சென்னையில் மட்டும் 10, 11 மற்றும் 12ம் தேதிகளில் தினசரி பாதிப்பு 7 ஆயிரத்தை கடந்துள்ளது. அதாவது கடந்து 10ம் தேதி 7,149 பேரும், 11ம் தேதி 7,466 பேரும், 12ம் தேதி 7,500 பேரும் பாதிப்புக்குள்ளாகினர். ஆனால் 13ம் தேதியில் இருந்து தினசரி பாதிப்பு படிப்படியாக குறைந்து வருகிறது.
13ம் தேதி 6,991 பேர் பாதிக்கப்பட்டு இருந்த நிலையில் அதற்கு அடுத்த நாள் 6,538 பேருக்கு தொற்று ஏற்பட்டது. நேற்றும் தினசரி பாதிப்பு 7 ஆயிரத்தை எட்டவில்லை என்பது ஆறுதலாக உள்ளது. இதன் மூலம் கடந்த 5 நாட்களாக சென்னையில் கொரோனா பாதிப்பு சதவீத அடிப்படையில் குறைந்து காணப்படுகிறது. கடந்த ஏப்ரல் ஒன்றாம் தேதி தினசரி பாதிப்பு 7.3 சதவீதமாக இருந்தது. இதன் பாதிப்பு கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து வருகிறது.
அதாவது மே 11ம் தேதி 25 சதவீதமாக இருந்த கொரோனா தொற்று அதற்கு அடுத்த நாள் 24 சதவீதமாக குறைந்தது. மே 13ம் தேதி அதன் எண்ணிக்கை 22.6 சதவீதமாகவும், மே 14ம் தேதி 20.1 சதவீதமாகவும் வைரஸ் தொற்று ஏற்பட்டது. இதுவரை சென்னையில் 4,32,344 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. இவர்களில் 3,80,274 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பி உள்ளனர். 46,367 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சென்னையில் இதுவரை கொரோனாவால் 5,703 பேர் பலியாகியுள்ளனர்
கொரோனாவை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தாலும் மக்களின் முழு ஒத்துழைப்பு இல்லாமல் எந்தவித மாற்றமும் ஏற்படாது. முழு ஊரடங்கு காலத்தில் வெளியில் வராமல் முழுமையாக கொரோனா விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டுவது மட்டுமில்லாமல், சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும், பொது இடங்களில் முகக்கவசம் அணிய வேண்டும்.
மக்கள் இது போன்ற ஒத்துழைப்பை அளித்தால் விரைவில் சென்னையில் மட்டுமில்லாமல் தமிழகம் முழுவதிலும் நோய் தொற்று குறைந்து விடும்.