தமிழகத்தில் தீவிரமடைந்து வரும் கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்தும் விதமாக அரசு சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக கொரோனா தொற்று உறுதி செய்யப்படும் நபர்கள் அரசு மருத்துவமனைகள் மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட மையங்களில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அப்படி அரசு சார்பில் அமைக்கப்படும் தனிமைப்படுத்தப்பட்ட சிகிச்சை முகாம்களில் பல இடங்களில் முட்டையுடன் முறையான உணவு வழங்கப்பட்டாலும், சில இடங்களில் சரியாக உணவு கிடைப்பதில்லை என குற்றச்சாட்டு எழுகிறது. இந்நிலையில் கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் பொறியியல் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா சிகிச்சை மையத்தில் கழிப்பறைகள் சுத்தமாக இல்லை என்றும், சரியான நேரத்திற்கு உணவு வழங்கப்படுவதில்லை என்றும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மேலும் தாமதமாக வழங்கப்படும் உணவும் சரியாக வேகாமல் அரைகுறையாக வழங்கப்படுவதாகவும், இதனால் உடல் நலக்கோளாறுகள் ஏற்படுவதாகவும் நோயாளிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து வெளியாகியுள்ள வீடியோ ஒன்றில், பர்கூர் கொரோனா சிகிச்சை மையத்தில் வழங்கப்படும் சாப்பாட்டில் பூச்சி, முடி உள்ளிட்டவை இருப்பதாகவும், இட்லி போன்றவை சரியாக வேகவைக்கப்படாமல் பரிமாறப்படுவதாகவும் நோயாளிகள் குற்றச்சாட்டியுள்ளனர். கழிப்பறைகளை சுத்தம் செய்வதே இல்லை என்றும், ஆர்.ஓ. வாட்டர் சிஸ்டம் பழுதடைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
மேலும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள எங்களுக்கு முறையான உணவும், சுகாதாரமும் இல்லை என்றால் எப்படி மீள முடியும் என கேள்வி எழுப்பியுள்ள அவர்கள், கொடுக்கிற சாப்பாட்டில் பாதி குப்பைத் தொட்டிக்கே செல்வதாகவும், பலரும் பசியால் வாடுவதாகவும் அடுக்கடுக்கான பகீர் தகவல்களை பகிர்ந்துள்ளனர். கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள எங்களுடைய உடல் நிலையில் அக்கறை கொண்டு, மாவட்ட ஆட்சியர் உடனடியாக தலையிட்டு தீர்வு காண வேண்டுமென உருக்கமாக கோரிக்கை வைத்துள்ளனர்.
மற்றொரு வீடியோவில் பெண் நோயாளி ஒருவர் அதிகாரியிடம் “முட்டை எல்லாம் கூட வேண்டாம் சார்… கொஞ்சம் ரசம் சாதம் கொடுத்தால் போதும், சாதத்தை நன்றாக வேகவைத்து கொடுங்கள், எங்களுடைய அறையை நாங்களே சுத்தமாக வைத்துக் கொள்கிறோம். ஆனால் நல்ல உணவாவது கொடுங்கள்” என பரிதாபமாக கோரிக்கை வைக்கும் காட்சிகள் காண்போரை அதிர்ச்சியடையச் செய்துள்ளது.