கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் எம்.பி. எச்.வசந்தகுமாருக்கு கடந்த 10ம் தேதி கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து சென்னையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்தார். கடந்த சில நாட்களாகவே கவலைக்கிடமான நிலையில் இருந்த அவருடைய உடல் நிலை இன்று மிகவும் மோசமானது. சரியாக மாலை 6.56 மணிக்கு அவருடைய உயிர் பிரிந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இதனால் காங்கிரஸ் கட்சி தலைவர்கள், தொண்டர்கள், குடும்பத்தினர், தொகுதி மக்கள் என அனைவரும் சோகத்தில் மூழ்கியுள்ளனர். எம்.பி. வசந்த குமாரின் திடீர் மறைவிற்கு பிரதமர் மோடி, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி மற்றும் மூத்த நிர்வாகிகள், அரசியல் கட்சி தலைவர்கள் ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் மறைந்த வசந்த குமாரின் உடல் மக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக சத்யமூர்த்தி பவனில் வைக்கப்படும் என அக்கட்சியின் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார். “மறைந்த திரு எச்.வசந்தகுமார் அவர்களின் உடல் பொதுமக்களின் பார்வைக்காக நாளை (29.08.2020) சனிக்கிழமை காலை 10 மணியளவில் சென்னை, சத்தியமூர்த்தி பவன் முகப்பில் வைக்கப்படும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.
மறைந்த திரு எச்.வசந்தகுமார் அவர்களின் உடல் பொதுமக்களின் பார்வைக்காக நாளை (29.08.2020) சனிக்கிழமை காலை 10 மணியளவில் சென்னை, சத்தியமூர்த்தி பவன் முகப்பில் வைக்கப்படும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.
— KS_Alagiri (@KS_Alagiri) August 28, 2020