பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டு வரும் விளிம்புநிலை விவசாயிகளின் துன்பங்களைக் குறைக்கும் வகையில் 2019 பிப்ரவரி 24 ஆம் தேதி பிரதமரின் கிசான் திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். பிரதம மந்திரியின் விவசாய நிதியுதவித் திட்டத்தின் கீழ், நிலமிருக்கும் தகுதியான விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ஆறாயிரம் ரூபாய் உதவித் தொகையாக வழங்கப்பட்டு வருகிறது. நாடு முழுவதும் செயல்படுத்தப்படும் இந்த திட்டத்தின் மூலம் விவசாயிகள் பயனடைந்து வருகின்றனர். உதவித் தொகை 6 ஆயிரம் ரூபாயை மூன்று தவணைகளாக பிரித்து விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தி வருகிறது அரசு.
இந்நிலையில் செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் பிரதமரின் கிசான் திட்டத்தில் முறைகேடு நடந்துள்ளதாக புகார் வந்ததையடுத்து வருவாய் மற்றும் வேளாண் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். வேளாண் உதவி இயக்குநர் அசோகன் தலைமையிலான அதிகாரிகள், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் உள்ள கிராமங்களுக்கு நேரடியாகச் சென்று விசாரணை நடத்தியதில், சுமார் 30 ஆயிரம் பேர் முறைதவறி பணம் பெற்றிருப்பது தெரியவந்துள்ளது.
இது குறித்து அதிகாரிகள் கூறுகையில், பிரதமரின் கிசான் திட்டத்தின் கீழ் பணம் பெற்று தருவதாக பல தரகர்கள் நிலமில்லாத விவசாயிகளிடம் பணம் பெற்றுக் கொண்டு முறைகேடு செய்திருக்கின்றனர். இவ்விசாரணைக்கு பிறகு புதிய சேர்க்கை பதிவுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. நிலமில்லாத விவசாயிகள் இத்திட்டத்தின் கீழ் உதவித் தொகை பெற முடியாது. கடந்த ஏப்ரல் 1-ஆம் தேதிக்குப் பிறகு இத்திட்டத்தில் சேர்க்கப்பட்டவர்களின் விபரங்களைத் திரட்ட உத்தரவிடப்பட்டுள்ளது. வேளாண் மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு முறைகேடாக இத்திட்டத்தில் சேர்ந்திருப்போரைக் கண்டுபிடிக்கவும், அவர்களுக்கு விவசாய நிதியுதவி வழங்கப்பட்டு இருந்தால் அதனை திரும்ப பெறவும் உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் இம்மோசடியில் ஈடுபட்ட தரகர்கள் மற்றும் இதில் தொடர்புடையவர்களையும் கண்டுப்பிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது” என்று கூறியுள்ளார்கள்.