கேரள மக்களால் சிறப்பாக கொண்டாடப்படும் பாரம்பரியமான பண்டிகை ஓணம் பண்டிகை. பத்து நாட்களுக்கு வெகு சிறப்பாக சாதி, மத பேதமின்றி அனைத்து மக்களாலும் கொண்டாடப்பட்டு வருகின்றது. கோவை மாவட்டத்தில் கேரள மக்கள் அதிக அளவில் வசித்து வருகின்றனர். இந்நிலையில் வரும் ஆகஸ்ட் 31-ஆம் தேதி திரு ஓணம் பண்டிகை கொண்டாடப்பட இருக்கிறது.
இதனையொட்டி கோவை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் ராசாமணி உத்தரவிட்டுள்ளார். இது குறித்து ஆட்சியர் வெளியிட்ட உத்தரவில் கூறியுள்ளதாவது, ஓணம் பண்டிகையை முன்னிட்டு, ஆகஸ்ட் 31ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்படுகிறது. விடுமுறை நாளன்று கோவையிலுள்ள கருவூலம் மற்றும் சார்நிலை கருவூலங்கள், பாதுகாப்பு அலுவலகங்கள் குறைந்த பணியாளர்கள் கொண்டு இயங்கும். கொரோனா வைரஸ் தொற்று பரவலை தடுக்கும் வகையில், ஓணம் பண்டிகையை சமூக இடைவெளியுடன் பாதுகாப்பாக கொண்டாட வேண்டும். உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்ட ஆகஸ்ட் 31 ஆம் தேதிக்கு பதிலாக செப்டம்பர் 12ம் தேதி சனிக்கிழமை வேலை நாளாக அறிவிக்கப்படுகிறது, என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.