கடந்த ஆண்டு ஜூலை மாதம் 29-ஆம் தேதி மங்களூர் நேத்ராவதி ஆற்றில் குதித்து தற்கொலை செய்துக் கொண்டார் கபே காபி டே உரிமையாளர் வி.ஜி.சித்தார்த்தா. இவர் கர்நாடக முன்னாள் முதலமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணாவின் மருமகனாவார். வருமான வரித்துறையின் துன்புறுத்தலால் தான் சித்தார்த்தா தற்கொலை செய்துக் கொண்டார் என்று செய்திகள் கூறப்பட்டது.
சித்தார்த்தாவின் இறுதி கடிதத்தில் கூறப்பட்டது குறித்து விசாரிக்க, காபி டே எண்டர்பிரைசஸ் லிமிடெட்(CDEL) இயக்குனர்கள் ஓய்வுபெற்ற சிபிஐ புலன்விசாரணை அதிகாரியான அஷோக் மல்ஹோத்ராவை நியமித்திருந்தது.
அஷோக் மல்ஹோத்ரா நடத்திய விசாரணையில் காபி டே எண்டர்பிரைசஸிலிருந்து ரூபாய் 3535 கோடியை மைசூர் அமல்கமேட்டட் காபி எஸ்டேட்ஸ் என்ற தனது சொந்த நிறுவனத்திற்கு எடுத்துக் கொடுத்துள்ளார் என்றும், அதிலிருந்து ரூபாய் 832 கோடி மட்டுமே திரும்ப செலுத்தப்பட்டு மீதமுள்ள ரூபாய் 2693 கோடி கணக்கில் இல்லை என்றும் அறிக்கைக் கொடுத்துள்ளார்.
சித்தார்த்தாவின் தற்கொலை வருமான வரித்துறையின் அழுத்தத்தினால் தான் நடந்தது என்று கூறுவது முற்றிலும் தவறு என்றும், இச்சம்பவத்தில் வருமான வரித்துறையினர் மீது எந்த அதிகாரபூர்வமான புகார்களும் இல்லை என்றும் கூறியுள்ளார்.
கபே காபி டே நிறுவனர் வி.ஜி.சித்தார்த்தாவின் முயற்சி அதிக கடன்களையும், பங்குகளையும் பெற்று தர உதவியதே தவிர ஒரு நல்ல இலாபகரமான வணிகத்தை ஏற்படுத்தி தர தவறிவிட்டது என்று சிபிஐ அதிகாரி அஷோக் மல்ஹோத்ரா தெரிவித்துள்ளார்.