தமிழகத்தில் கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக அவ்வப்போது தன்னுடைய சோசியல் மீடியா பக்கங்களில் விழிப்புணர்வு வீடியோக்களை பதிவிட்டு வருகிறார். அதன் படி இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள விழிப்புணர்வு வீடியோவில் கொரோனா தொற்றிலிருந்து தங்களை தற்காத்து கொள்ள மக்கள் அனைவரும் மிக முக்கியமான மூன்று விஷயங்களை கடைபிடிக்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வீடியோவில் பேசியுள்ளது: கொரோனா பெருந்தோற்று காலம் என்பதால் அனைவரும் மிகுந்த பாதுகாப்புடனும், எச்சரிக்கையுடனும் இருக்க வேண்டும். முடிந்த அளவிற்கு வீட்டிற்குள்ளேயே இருங்கள். அத்தியாவசிய தேவைகளுக்காக மட்டும் வெளியே சென்றாலும் தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். தொற்றிலிருந்து உங்களை தற்காத்துக் கொள்ள முகக்கவசம் மிகவும் அவசியம். முகக்கவசம் தான் தற்போது மைதர்களின் உயிர் கவசம். முகக்கவசத்தை மூக்கு, வாய் இரண்டையும் கவர் செய்யும் அளவிற்கு முழுவதுமாக மூடும் அளவிற்கு அணிய வேண்டும். மூக்கிற்கு கீழே முகக்கவசம் அணியவதால் எவ்வித பலனும் இல்லை.
மாஸ்க்கை தாடைக்கு போடக்கூடாது, முழுமையாக மூக்கு, வாயை மூடும் படி அணிய வேண்டும். மக்கள் அதிகம் கூடும் இடங்களான மருத்துவமனை, பேருந்து, அலுவலகங்கள், தொழிற்சாலைகளில் பயணியாற்றும் போது இரட்டை முகக்கவசம் அணிவது நல்லது என மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். கிருமிநாசினி கொண்டு அடிக்கடி கையை கழுவுங்கள். அனைவரும் கட்டாயம் தடுப்பூசி போட்டுக்கொள்ளுங்கள். கொரோனாவிலிருந்து தற்காத்துக் கொள்ள தடுப்பூசி கட்டாயம். மாஸ்க் அணிவது, கிருமி நாசினி யை பயன்படுத்துவது, தடுப்பூசி போட்டுக்கொள்வது ஆகிய மூன்றும் கொரோனா தொற்றிலிருந்து காக்கும். வரும் முன் காப்போம். கொரோனா இல்லாத தமிழகம் அமைப்போம் என கோரிக்கை விடுத்துள்ளார்.