தமிழகத்தில் தீயாய் பரவி வரும் கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்தும் விதமாக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றனர். நாளுக்கு நாள் அதிகரித்து வரும் தொற்றால் அரசு மருத்துவமனைகள், தனியார் மருத்துவமனைகள் என அனைத்தும் கொரோனா நோயாளிகள் நிரம்பி வழிகிறது. எனவே மாவட்டம் தோறும் சிகிச்சை மையங்களை ஏற்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் உத்தரவின் படி சேலத்தில் அதிகரித்து வரும் கொரோனா நோயாளிகளுக்காக இரும்பாலையில் சிகிச்சை மையம் அமைக்கும் பணி தொடங்கியது. கடந்த 10 நாட்களாக அமைச்சர் செந்தில் பாலாஜி மேற்பார்வையில் நடைபெற்று வந்த பணிகள் நிறைவடைந்தன. சேலம் உருக்காலையில் ஆக்ஸிஜன் வசதியுடன் கூடிய 500 படுக்கைகளைக் கொண்ட கொரோனா சிகிச்சை மையம் அமைக்கப்பட்டது.
இன்று சேலம், ஈரோடு, கோவையில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வு மேற்கொள்ள உள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முதலில் சேலத்தில் ஆய்வு மேற்கொண்டார். அதன் பின்னர் இரும்பாலையில் அமைக்கப்பட்டுள்ள 500 படுக்கைகள் கொண்ட கொரோனா சிகிச்சை மையத்தை திறந்து வைத்து, ஆய்வு செய்தார். அப்போது அமைச்சர்கள் செந்தில் பாலாஜி, மா.சுப்பிரமணியன் ஆகியோர் உடன் இருந்தனர்.