கொரோனா (covid-19) பரவல் பற்றிய தினசரி அப்டேட்களை போல, இன்று எதிரும் புதிருமாக நிற்கும் அமெரிக்கா, சீனா அரசுகளைப் பற்றி தினசரி வரும் அப்டேட்களும் உலக மக்களை கவலையில் ஆழ்த்தி வருகின்றன.
நேற்றைய செய்தி : அமெரிக்கா தனது நாட்டிலுள்ள சீனத் தூதரகத்தை மூட உத்தரவிட்டது.
இன்றைய செய்தி: சீனாவில் உள்ள அமெரிக்க தூதரகத்தை முடக்கியது சீனா. ரஷ்யா அமெரிக்கா பனிப்போர் என்பது கடந்த கால கதை. இன்று நாம் பார்த்துக் கொண்டிருப்பது சீனா, அமெரிக்கா பனிப்போர்.
ஈராக்கின் எண்ணெய் வளத்தை கைப்பற்ற அமெரிக்கா துடித்த பொழுது அதற்கு தோதாய் அமைந்தது அமெரிக்கா மீதான அல்கொய்தா இயக்கத்தின் இரட்டை கோபுர தாக்குதல். இந்த தாக்குதலுக்கு பதிலடியாக ஈராக் மீது போர் தொடுத்து, அந்நாட்டின் அதிபர் சதாம் உசேனை கொன்று, அந்நாட்டின் எண்ணெய் வளத்தை கைப்பற்றி தனது ஆசையை தீர்த்துக் கொண்டது அமெரிக்கா.
இன்று சீனாவின் முப்பரிமாண வளர்ச்சி அமெரிக்காவை எரிச்சல் அடைய வைத்துள்ளது. எப்படியாவது சீனாவின் வளர்ச்சியை தடுத்து விட துடித்துக்கொண்டிருந்த அமெரிக்காவிற்கு கொரோனா வைரஸ் (covid-19) பரவல் ஒரு வரப்பிரசாதமாக அமைந்து விட்டது. பெரும்பாலான ஐரோப்பிய, ஆசிய, தென் அமெரிக்கா நாடுகளை சீனாவிற்கு எதிரான நிலைப்பாட்டை எடுக்க வைத்துள்ளது, அமெரிக்காவின் இராஜதந்திரத்திற்கு கிடைத்துள்ள வெற்றி. அமெரிக்கா சீனா இரண்டு நாடுகளிடமும் நேசக்கரம் நீட்டிக் கொண்டிருந்த இந்தியாவை கூட, அமெரிக்க சார்பு நிலைப்பாட்டை எடுக்க வைத்து விட்டது அமெரிக்கா.
நீண்ட கால நோக்கில் இது சரியா? தப்பா? இதனால் நம் நாட்டிற்கும், மக்களுக்கும் ஏற்படும் சாதக பாதக அம்சங்களை இனிதான் நாம் தெரிந்துகொள்ள முடியும். தற்போது அமெரிக்காவில் உள்ள சீன தூதரகங்கள் உளவு பார்ப்பதாகக் கூறி ஹூஸ்டன், சான் பிரான்சிஸ்கோ நகரங்களில் அமைந்துள்ள சீன தூதரகங்களை மூடச்சொல்லி உத்தரவிட்டுள்ளது அமெரிக்க அரசு. இதற்கு பதிலடியாக வூகானில் உள்ள அமெரிக்க தூதரகத்தை மூடச் சொல்லி சீனா உத்தரவிட்டுள்ளது.உலக மேலாண்மை, உலக நாட்டாமை
அதிகாரப் பசி, இவ்விரு நாடுகளுக்கிடையே தொடங்கிவிட்டது எதார்த்தம்.
இதில் யார் வெல்வார்கள் என்பதற்கு காலம் பதில் சொல்லும். இவர்களின் ஆதிக்கப் போட்டியில் பெரிய பாதிப்பை சந்திக்கப் போவது இந்தியா போன்ற பிற நாடுகளும் அதன் மக்களும் தான். நமக்கு ஏற்பட்டுள்ள முதல் இழப்பு 20 இந்திய ராணுவ வீரர்களின் வீரமரணம்.