கொரோனா லாக்டவுன் காரணமாக பேருந்துகள் இயக்கப்படாததால் அனைத்து தனியார் மற்றும் அரசு பேருந்துகள் பணிமனைகளில் நிறுத்தப்பட்டுள்ளன. அப்படி சென்னை கோயம்பேட்டில் உள்ள தனியார் ஆம்னி பேருந்துகள் நிலையத்தில் ஏற்பட்ட திடீர் விபத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆம்னி பேருந்து நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த யூனிவர்சல் டிராவல்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான பேருந்தில் முதலில் பற்றி தீ, மளமளவென அருகில் இருந்த மற்ற பேருந்துகளுக்கு பரவியது.
இதையடுத்து தகவல் கிடைத்த உடன் கோயம்பேடு தீயணைப்புத்துறையினர் விரைந்து வந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் கொளுந்துவிட்டு எரிந்த தீயை கட்டுப்படுத்த முடியவில்லை, இதையடுத்து அண்ணாநகர் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதியில் இருந்து 2 தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டு தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டன.
சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பற்றி எரிந்த தீயை தீயணைப்புத்துறையினர் போராடி அணைந்தனர். இந்த விபத்தால் வெளியேறிய கரும்புகை சில கிலோ மீட்டர்கள் வரை அடர்த்தியாக தெரிந்தது. தீயில் சிக்கி யூனிவர்சல், பாரி, வேல்முருகன் ஆகிய ட்டிராவல்ஸ்க்கு சொந்தமான பேருந்துகள் முற்றிலும் எரிந்து போனது.
கொரோனா லாக்டவுன் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதலே பேருந்துகள் இயக்கப்படாததால், பணிமனையிலேயே நிறுத்தப்பட்டுள்ளன. இதனால் எவ்வித பயன்பாடும் இல்லாத பேருந்து திடீரென தீப்பற்றியதா?, இல்லை சமூக விரோதிகள் யாராவது தீ வைத்தார்களா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.