தமிழகத்தில் கொரோனா தொற்றால் அதிகரிப்போரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இன்று சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையின் படி, ஒரே நாளில் 5,976 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 4 லட்சத்து 51 ஆயிரத்து 827 ஆக அதிகரித்துள்ளது. இந்த நெருக்கடியான நேரத்திலும் இன்று மட்டும் 6 ஆயிரத்து 334 பேர் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். இதன் மூலம் தொற்றால் குணமடைந்தோரின் எண்ணிக்கை 3 லட்சத்து 92 ஆயிரத்து 507 ஆக அதிகரித்துள்ளது. இன்று ஒரே நாளில் கொரோனாவுக்கு 79 பேர் பலியாகியுள்ள நிலையில், இதுவரை மொத்தம் 7,687 பேர் பலியாகியுள்ளனர்.
இது ஒருபுறம் என்றால் கொரோனா சிகிச்சையிலிருந்து தப்பிக்க முயலும் நோயாளிகள் எதிர்பாராத விதமாக விபத்தில் சிக்கி உயிரிழக்கும் சம்பவங்களும் அரங்கேறி வருகிறது. கொரோனா சிகிச்சை பெற்று வந்த பெண் ஒருவர் மன உளைச்சலால் 4வது மாடியிலிருந்து விழுந்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. சென்னை மதுரவாயலை அடுத்துள்ள அதையாளம்பட்டு பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களை தமிழக அரசு சார்பில் தனிமைப்படுத்தி சிகிச்சை அளித்து வருகிறது. அங்கு 200 பேருக்கும் மேல் தனிமைபடுத்தி வைக்கப்பட்டுள்ளனர்.
சமீபத்தில் ஆலப்பாக்கத்தை சேர்ந்த செல்வி 48 என்பவர் கடந்த 1ம் தேதி சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார், அவர் சிகிச்சைக்கு வந்ததிலிருந்தே மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது. அவர் வெளியே செல்ல தொடர்ந்து அனுமதி கேட்டுவந்தார். இதைதொடர்ந்து, இன்று அவர் வெளியே செல்ல முயன்றதாகவும் அப்பொழுது நான்காவது மாடியிலிருந்து தவறி விழுந்ததாக கூறப்படுகிறது.
கீழே விழுந்த செல்வி பலத்த காயங்களுடன் மயங்கி கிடந்ததால் அருகிலுள்ள தனியார் மருத்துவமனையில் கொண்டு சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட போதும் பரிதாபமாக உயிரிழந்தார். ஏற்கனவே மன உளைச்சலில் இருந்த செல்வி தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது முகாமில் இருந்து தப்ப முயன்ற போது மாடியிலிருந்து தவறி விழுந்து உயிரிழந்தாரா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.