நாடு முழுவதும் பி ஆர்க், பி டெக் உள்ளிட்ட படிப்புகளுக்கான JEE நுழைவுத் தேர்வு பலத்த எதிர்ப்புகளுக்கு இடையிலும் மத்திய அரசால் நேற்று தொடங்கப்பட்டு உள்ளது. செப்டம்பர் 6 ஆம் தேதி வரை நாட்டின் பல பகுதிகளில் பல மையங்களில் நடைபெற உள்ளது. தமிழ்நாட்டில் 34 தேர்வு மையங்களில் தேர்வு தொடங்கியது. வேலூரில் நடைபெற்ற தேர்வில் 168 மாணவர்களுக்கு 77 பேர் மட்டுமே கலந்து கொண்டனர்.
பிற்பகலில் நடைபெற்ற தேர்வில் 234 மாணவர்களுக்கு 115 பேர் மட்டுமே கலந்து கொண்டனர். அதாவது வேலூர் மையத்தில் நேற்றைய தினம் நுழைவுத்தேர்வு எழுத வேண்டிய மொத்த மாணவர்கள் 402 பேர். ஆனால் தேர்வு எழுதியவர்கள் 192 பேர் மட்டுமே. இதற்கு காரணம் சரியான பேருந்து வசதிகள் இல்லாததே என்ற கசப்பான தகவல் தெரியவந்துள்ளது. ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு மாவட்டங்களுக்குள் மட்டுமே பேருந்து சேவை தொடங்கியுள்ளது தமிழக அரசு. மாவட்டம் விட்டு மாவட்டம் பேருந்துகள் இயக்கப்படாததால் நுழைவுத்தேர்வு எழுத வேண்டிய மாணவர்கள் நுழைவுத் தேர்வு மையத்திற்கு சரியான நேரத்திற்கு செல்ல இயலவில்லை.
இதுகுறித்து தட்சன் சிங் என்ற மாணவர் செய்தியாளர்களிடம் கூறும்போது தேர்வுக்காக ஆம்பூரில் இருந்து இன்று காலை 7 மணிக்கு பேருந்தில் ஏறினேன். ஆனால் அந்த பேருந்து 7.45 க்கு தான் புறப்பட்டது ஆம்பூரில் இருந்து மாதனூர் வரை மட்டுமே பேருந்தில் பயணிக்க முடிந்தது. அங்கிருந்து ஆட்டோ மூலம் பள்ளிகொண்டா வந்தடைந்து அங்கிருந்து பேருந்து இல்லாததால் இருசக்கர வாகனத்தில் சென்றவர்களிடம் லிப்ட் கேட்டு தேர்வு மையத்துக்கு வருவதற்குள் காலை ஒன்பதரை மணி ஆகிவிட்டது.
பேருந்து சேவையில் கட்டுப்பாடு இல்லாமல் இருந்திருந்தால் குறித்த நேரத்திற்கு தேர்வு மையத்துக்கு வந்திருக்க முடியும். கஷ்டப்பட்டு வந்தும் தேர்வு எழுத முடியவில்லை என்பது வருத்தமாக இருக்கிறது. என்று தெரிவித்துள்ளார். தமிழக அரசு விரைவில் தமிழகம் முழுவதும் கட்டுப்பாடு இல்லாத பேருந்து சேவையை வழங்க வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.