கொரோனா தொற்று காரணமாக கடந்த மார்ச் மாதம் முதலே அனைத்து சினிமா படப்பிடிப்புகளும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இதனால் நாடு முழுவதும் லட்சக்கணக்கான தொழிலாளர்கள், சினிமா துணை நடிகர்கள் உள்ளிட்டோர் வேலையின்றி தவித்து வருகின்றனர். கடும் பொருளாதார நெருக்கடியை சந்தித்து வரும் திரையுலகினர் படப்பிடிப்பிற்கு அனுமதி அளிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து வந்தனர்.
பல புதிய படங்களின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் முடக்கப்பட்டதால் கோலிவுட்டில் மட்டும் ரூ.500 கோடி முதலீடு முடங்கியது. சின்னத்திரை கலைஞர்களும் தொடர்ந்து அரசிடம் கோரிக்கை விடுத்து வந்தனர். இதையடுத்து தமிழகத்தில் கடந்த மே மாதம் 11ம் தேதி முதல் போஸ்ட் புரொடக்ஷன் பணிகளை மேற்கொள்ள பல்வேறு கட்டுப்பாடுகளுடன் அனுமதி அளிக்கப்பட்டது.
இருப்பினும் சினிமா படப்பிடிப்புகளுக்கு எவ்வித அனுமதியும் அளிக்கப்படவில்லை. இந்நிலையில் மத்திய, மாநில அரசுகளிடம் சினிமா படப்பிடிப்புக்கு அனுமதிக்க வேண்டுமென அந்தந்த மொழிகளைச் சேர்ந்த தயாரிப்பாளர்கள், திரைத்துறையினர் தொடர் கோரிக்கைவிடுத்து வந்தனர்.
இந்நிலையில் மத்திய அமைச்சர் ஜவுடேகர், அரசின் நெறிமுறைகளை பின்பற்றி சினிமா ஷூட்டிங்குகளை நடத்தலாம் என அனுமதி அளித்துள்ளார். அத்துடன் ஷூட்டிங்கின் போது பின்பற்ற வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது.
- ஷூட்டிங் நடக்கும் இடத்தில் பார்வையாளர்களுக்கு அனுமதி கிடையாது.
- கட்டாயம் 6 அடி சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும்.
- குறைந்த பணியாளர்களாஇ மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
- படப்பிடிப்பு தளத்தில் அனைவரும் கட்டாயம் மாஸ்க் அணிய வேண்டும், அடிக்கடி கைகளை கழுவ வேண்டும், எச்சில் துப்பக்கூடாது.
- கேமரா முன்பு நிற்கும் நேரம் தவிர பிற நேரங்களில் முகக்கவசம் அணிவது கட்டாயம்.
- காஸ்ட்டியூ, விக், மேக்கப் பொருட்களை முடிந்த அளவிற்கு பிறருடன் பகிர்ந்து பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.
- கேமரா மேன் உள்ளிட்ட தொழில்நுட்ப கலைஞர்கள் மற்றும் படப்பிடிப்பு கருவிகளை கையாளுபவர்கள் கட்டாயம் கிளாவுஸ் அணிய வேண்டும்.
- மேக்கப் மேன்கள் கட்டாயம் மாஸ்க் அணிய வேண்டும்.
- அவுட்டோர் ஷூட்டிங்கின் போது கூட்டம் கூடாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்