தமிழகத்தில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த புயல் வேகத்தில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றனர். ஆனால் அதை விட வேகமாக பரவும் தொற்றைக் கட்டுப்படுத்த முடியாமல் இந்தியா மட்டுமல்ல, உலகின் மிகப்பெரிய வல்லரசு நாடுகளே விழி பிதுங்கி நிற்கின்றன. முன்களப்பணியாளர்களான டாக்டர்கள், செவிலியர்கள், காவல்துறையினர், தூய்மை பணியாளர்கள், மாவட்ட ஆட்சியர்கள், அரசு ஊழியர்கள் ஆகியோரையும் தாண்டி, களத்தில் இறங்கி பணியாற்றும் அரசியல் கட்சி தலைவர்கள், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள், அமைச்சர்கள் ஆகியோரையும் கொரோனா தொற்று பாதித்து வருகிறது.

கடந்த 10ம் தேதி கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட கன்னியாகுமரி காங்கிரஸ் எம்.பி. வசந்தகுமார் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவர் உயிரிழப்பதற்கு முன்பாக மேற்கொள்ளப்பட்ட கொரோனா பரிசோதனையில் அவருக்கு தொற்று இல்லை என்பது உறுதி செய்யப்பட்டது. ஆனால் கொரோனா தொற்று காரணமாக அவருடைய நுரையீரல் கடும் பாதிப்புகளை சந்தித்த குறிப்பிடத்தக்கது. நேற்று அவருடைய உடல் சொந்த ஊரில் நல்லடக்கம் செய்யப்பட்டது. அந்த துக்கத்தில் இருந்து தமிழக மக்கள் மீள்வதற்குள் மற்றொரு செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பாஜக மூத்த தலைவரான இல.கணேசனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருடைய உடல் நிலை நலமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதனால் மிகுந்த அதிர்ச்சியில் உள்ள தமிழக பாஜக தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் இல.கணேசன் விரைவில் பூரண நலம் பெற வேண்டுமென பிரார்த்தித்து வருகின்றனர்.