தென்னிந்தியாவின் மிகப்பெரிய மண் அணை என்றால் அது ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணையே ஆகும். பவானிசாகர் அணையின் நீர்பிடிப்பு பகுதியாக நீலகிரி மலைப்பகுதி உள்ளது. இந்த மழைப்பகுதியில் கடந்த சில நாட்களாக கனத்த மழை பெய்து வருவதால் பவானிசாகர் அணையின் நீர்மட்டம் அதிகரித்த வண்ணம் உள்ளது.
அணையின் மொத்த நீர்பிடிப்பு உயரம் 105 அடியாக உள்ள நிலையில், கனமழையால் தற்போது அணையின் நீர்மட்டம் 101 அடியை எட்டியுள்ளது. இதையடுத்து பவானிசாகர் அணையிலிருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறந்துவிட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டிருந்தார். இதனை தொடர்ந்து அமைச்சர்கள் செங்கோட்டையன், கருப்பணன், ஆட்சியர் கதிரவன் ஆகியோர் பவானிசாகர் அணையை மலர்தூவி திறந்து வைத்தனர்.

பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்காலில் தண்ணீர் திறந்து விடப்படுகிறது. பவானி ஆற்றில் இருந்து திறந்துவிடப்படும் நீரானது கொடிவேரி அணையிலிருந்து தடப்பள்ளி-அரக்கன்கோட்டை வாய்க்காலுக்கும், காலிங்கராயன் அணைக்கட்டில் இருந்து காலிங்கராயன் வாய்க்காலுக்கும் செல்கிறது. இவ்வாறு அனுப்பப்படும் நீரானது வினாடிக்கு 500 கன அடி வீதம் பாசனத்திற்காக திறக்கப்படவுள்ளது. மேலும் தொடர்ந்து 120 நாட்களுக்கு திறக்கப்படும் தண்ணீரி ஈரோடு, திருப்பூர், கரூர், ஆகிய மாவட்டங்களில் உள்ள பகுதிகள் சுமார் 1,03,500 ஏக்கர் நிலங்கள் பயனடையும் என்பதால் விவசாய மக்கள் மிகவும் மகிழ்சியில் உள்ளனர்.