Newskadai.com
லைஃப் ஸ்டைல்

கொரோனாவிற்கு எதிராக போர் புரிய வரும் AZD-1222

Share this:

Covid-19 கொரோனா நோய் பெருந்தொற்றிற்கு தடுப்பு மருத்துகள் கண்டுபிடிக்கும் பணி உலகளவில் பல நாடுகளில் அதி வேகமாக நடைப்பெற்று வருகிறது. இந்நிலையில் ஆகஸ்ஃபோர்டு மருத்துவ பல்கலைக்கழகமும் ஆஸ்ட்ராஸெனிக்கா மருந்து ஆராய்ச்சி மற்றும் உற்பத்தி நிறுவனமும் சேர்ந்து AZD-1222 என்று பெயரிடப்பட்ட தடுப்பு மருந்தை உருவாக்கியுள்ளது.

இதுகுறித்து சிவகங்கை பொது நல மருத்துவர் Dr.ஃபாரூக் அப்துல்லா கூறுகையில், நம் பிறப்பில் இருந்து நம் உடலில் இருக்கும் இயற்கையான நோய் எதிர்ப்பு சக்தியும், பல நோய்கிருமிகளுடன் போராடி உடல் பெறும் எதிர்ப்பு சக்தியும், தடுப்பூசி மூலம் பெறும் எதிர்ப்பு சக்தியும் நமது உடலில் இயங்கிக் கொண்டிருக்கிறது.

இந்த எதிர்ப்பு சக்திகள் இரண்டு வகையாக பிரிந்து நம் உடலில் செயல்படுகின்றன.

1.Humoral immunity, 2. Cellular immunity. ஒரு எதிரிப்படை ஊருக்குள் நுழையும் போது அந்த ஊரில் உள்ள இளைஞர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து உள்நுழைந்த எதிரியை தோற்கடிக்க போராடுவர், எதிரி வென்றால் ஊர் எதிரி வசமாகும். இளைஞர்கள் வென்று விட்டால் அந்த எதிரிகளைப்பற்றி தங்களது வாரிசுகளுக்கு கூறி வளர்ப்பார்கள். அவ்வாறு எதிரிகளின் நினைவுகளைப் பற்றி கூறி வளர்க்கப்படும் வாரிசுகள் தான் T-Memory cells. இந்த வகை எதிர்ப்பு சக்தி தான் நீண்ட காலம் நீடிக்கும். மீண்டும் அந்த எதிரி எப்போது நுழைந்தாலும் இந்த வாரிசுகள் உடனே விரைந்து சென்று அழிப்பார்கள்.

முதன்முதலில் எதிரி நுழைந்த போது அவர்களை எதிர்த்தவர்கள் தான் – Humoral Immunity, எதிரிகளைப்பற்றி கூறிக்கூறி வளர்க்கப்பட்ட வாரிசுகள் தான் – Cellular Immunity. நோய் தொற்றாக இருந்தாலும் சரி, தடுப்பூசியானாலும் சரி, மேற்சொன்ன இரண்டு எதிர்ப்பு சக்தியை சரியாக தூண்ட வேண்டும்.

எப்படி தடுப்பூசிகள் நம் உடலில் செயல்படுகின்றது என்று பார்ப்போம்…

நோய் தொற்று உண்டாக்கும் கிருமியை உயிர்ப்புடன் ஆனால் நோய் உண்டாக்க இயலாதவாறு பலம் குன்றச்செய்து அதை செலுத்துவது (Live Attenuated Vaccine) என்பது ஒரு முறை, அல்லது நோய் தொற்று உண்டாக்கும் கிருமியைக் கொன்று அதை செலுத்துவது(Killed Vaccine) மற்றொரு முறை.

இதில் ஒரு முறையில் தடுப்பூசிகள் நம் உடலில் செலுத்தப்பட்டதும், நமது உடல் அதை கிருமித் தொற்றாக எண்ணி அந்த குறிப்பிட்ட கிருமிக்கு எதிராக எதிர்ப்பு சக்தியை உண்டாக்கும். அதற்குப் பெயர் தான் “ஆண்ட்டிபாடிகள்”. இப்படியாக தடுப்பூசி செலுத்தி கிடைத்த எதிர்ப்புசக்தியைக் கொண்டிருக்கும் ஒருவரை வெளியிலிருந்து அந்த கிருமி தாக்கும் போது ஏற்கனவே தடுப்பூசி உருவாக்கி வைத்திருந்த ஆண்டிபாடிகள் புதிதாக நுழைந்த கிருமியை எதிர்த்துப் போராடி அழித்து விடும். இதனால் அந்த நபருக்கு நோய் தொற்று ஏற்படாமல் தடுக்கப்படுகிறது.

இப்போது புதிதாக கண்டறியப்பட்டுள்ள கொரோனா தடுப்பு மருந்து AZD1222 என்பது எப்படி உருவாக்கப்பட்டுள்ளது என்று பார்ப்போம்..

Covid-19 கொரோனா வைரஸ்களின் மேற்பரப்பில் உள்ள ஸ்பைக் ப்ரோட்டின்(Spike Protein – கொண்டு தான் அந்த வைரஸ் நமது சுவாசப்பாதை செல்களில் ஒட்டுகின்றது) எனும் வெளிப்புற புரதத்தை மட்டும் மரபணு வரிசைப்படுத்துதல் முறைப்படி தனித்தனியாக வெட்டி எடுத்து சிம்பன்சி குரங்கினத்தை தாக்கும் அடினோ வைரஸ் எனும் சாந்தமான அடினோவைரஸ் கிருமியில் ஒட்டி விட்டனர்.

பிறகு அந்த அடினோவைரஸை பலம் குன்றச்செய்து மனிதர்களில் தொற்று ஏற்படுத்தாதவாறு மாற்றி அமைத்தனர். இதனால் அந்த வைரஸ் – கொரோனா ஸ்பைக் ப்ரோட்டினை ஏற்று அதை பல்கிப்பெருகச்செய்யும் வெக்டார் ஆக செயல்படுகின்றது.

இப்படி உருவாக்கப்பட்ட தடுப்பு மருந்து மனிதர்களுக்குள் தடுப்பூசியாக செலுத்தப் படுகின்றது. மனித உடலுக்கள் சென்ற அந்த பலம் குன்றிய வைரஸ் மேற்கொண்டு பல ஸ்பைக் ப்ரோட்டீன்களை உருவாக்குகின்றது. இந்த ஸ்பைக் புரதங்களை அடையாளம் கண்டுகொண்ட மனிதனின் உடல் அதற்கு எதிராக நோய் எதிர்ப்பு சக்தியை அதாவது ஆண்ட்டிபாடிகளை உருவாக்குகின்றது.

இவ்வாறு கொரோனா நோய் எதிர்ப்பு சக்தியை வேக்சின் மூலம் பெற்ற நபருக்கு எதிர்காலத்தில் கொரோனா தொற்று ஏற்படுமானால் உடனே அந்த எதிர்ப்பு சக்தி அந்த வைரஸ்களின் ஸ்பைக் ப்ரோட்டினை காலி செய்யும். இதனால் வைரஸால் சுவாசப்பாதையில் ஒட்டமுடியாமல் செயலிழந்து அவருக்கு நோய்த் தொற்று ஏற்படாமல் தடுக்கப்படும்.

இந்த தடுப்பூசி தற்போது மனிதர்களிடையே தனது முதல் மற்றும் இரண்டாம் படிநிலை பரிசோதனைகளை வெற்றிகரமாக முடித்துள்ளது. தடுப்பு மருந்து (Vaccine) செலுத்தப்பட்டு 28
நாட்களுக்குப்பிறகு செய்த ஆய்வில் 95% பேருக்கு ஸ்பைக் ப்ரோட்டினுக்கு எதிரான ஆண்ட்டிபாடிகள் நான்கு மடங்கு அதிகரித்துள்ளன. மேலும் தடுப்பூசி போடப்பட்டவர்களில் காய்ச்சல், உடல் வலி போன்ற பாராசிட்டமால் மாத்திரைக்கு கேட்கும் சாதாரண பக்கவிளைவுகள் மட்டுமே தோன்றியுள்ளன என்றும் இந்த தடுப்பூசி மூலம் மரணம் ஏற்படவில்லை என்றும் ஆறுதலான குறிப்புகள் கண்டறியப்பட்டுள்ளது.

இதுவரை குறிப்பிட்ட மக்களிடம் மட்டுமே நடத்தப்பட்ட இப்பரிசோதனை இன்னும் ஆப்பிரிக்க, ஆசிய போன்ற பல்வேறு மக்களிடையே நடைப்பெற்று இதே முடிவுகள் கிடைக்க வேண்டும். அதில் தொடர்ந்து நோய் எதிர்ப்பு சக்தி எப்படி இருக்கிறது என்றும் பக்கவிளைவுகள் தோன்றுகின்றனவா என்பது குறித்தும் ஆய்வு தொடரும்.

இந்த ஆய்வுகள் முழுமடையும் பட்சத்தில், நமக்கு மிக முக்கியமான ஒரு தடுப்பூசி இந்த வருட இறுதியிலோ அல்லது அடுத்த வருடத்தின் தொடக்கத்திலோ கிடைக்கும் என்று மருத்துவர் விளக்கி கூறியுள்ளார்.


Share this:

Related posts

அரசு நூலகங்கள் செயல்படும்…. தமிழக அரசு அறிவிப்பு…

MANIMARAN M

பொங்கி வரும் காவிரியைப் போல்… குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்க ஆடிப்பெருக்கில் இதை கட்டாயம் செய்யுங்கள்…!!

THAVAMANI NATARAJAN

நல்ல காரியங்கள் நடக்கும்… கண்பியூசே வேணாம், கரண்ட்கிட்ட கவனம் தேவை..!! இன்றைய ராசி பலன்கள்…

NEWSKADAI

ஏழைகளின் இதயத்தை துடிக்க வைத்த இதயம் அடங்கியது… மெர்சல் டாக்டர்

NEWSKADAI

திடீரென உயர்ந்த தங்கம் விலை… ஒரு நாளுக்குள் இவ்வளவு விலை கூடிபோச்சே…!!

NEWSKADAI

செல்போனிலேயே சுலபமாக புதிய ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிக்கலாம்…!!

NEWSKADAI