தேசிய அனைத்து மத நண்பர்கள் கூட்டமைப்பு என்ற அமைப்பின் சார்பில் அதன் தலைவர் பன்னீர்செல்வம் சென்னை ஐகோர்ட்டில் பொதுநல வழக்கு ஒன்றை தொடர்ந்திருந்தார். பொதுமக்களின் பாதுகாப்பு பணியிலும் கொரோனா தடுப்பு பணியிலும் ஈடுபட்டிருந்த போலீசாரை தமிழக காவல்துறை டாஸ்மாக் மதுபான கடைகளில் பாதுகாவலுக்கு அனுப்பியதால் மக்கள் நடமாட்டத்தை தடுக்கவும், கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தவும், கொரோனா தடுப்பு பணிகளிலும் காவலர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. ஆதலால் டாஸ்மாக் மதுபான கடைகளில் பாதுகாப்பிற்காக ஈடுபடுத்தப்பட்டுள்ள காவல்துறையினரை குறைத்து பொதுமக்களின் பாதுகாப்பு பணிகளில் அதிக காவலர்களை ஈடுபடுத்த உத்தரவிட வேண்டும் என அந்த மனுவில் அவர் கோரியிருந்தார்.
நீதிபதிகள் எம். எம். சுந்தரேஷ், ஆர். ஹேமலதா அமர்வில் இவ்வழக்கு விசாரணைக்கு வந்தது. தமிழக டிஜிபி சார்பில் உதவி ஐஜி இ. டி. சாம்சன் அறிக்கை ஒன்றை தாக்கல் செய்தார். அந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது போக்குவரத்தை ஒழுங்குபடுத்துதல், சோதனைச்சாவடி, கொரோனா தாக்குதலால் தனிமைப்படுத்தப்பட்ட பகுதி, அத்தியாவசிய தேவைகளுக்காக மக்கள் நடமாடும் இடங்கள், ரேஷன் கடை, மீன் சந்தை, காய்கறி அங்காடி, போன்ற இடங்களில் பாதுகாப்பு பணியிலும் சட்டம் ஒழுங்கை பாதுகாப்பதற்கான பணியிலும் தேவையான காவலர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
மேலும் டாஸ்மாக் மதுபான கடைகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள காவலர்களின் எண்ணிக்கை குறித்தும் பிற பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ள காவலரின் காவலர்களின் எண்ணிக்கை குறித்தும் பட்டியல் ஒன்றை தனது அறிக்கையில் தாக்கல் செய்தார்.
அந்த அறிக்கையின்படி டாஸ்மாக் பாதுகாப்பு பணியில் வெறும் 3007 காவலர்கள் மட்டுமே ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும், மற்ற பாதுகாப்பு பணிகளில் 43 ஆயிரத்து 419 காவலர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என்றும் இவர்களைத் தவிர கொரோனா தடுப்பு மற்றும் பாதுகாப்பு பணியில் ஊர்காவல் படையை சேர்ந்த 9 ஆயிரத்து 326 ஆண்களும் 2059 பெண்களும் ஈடுபடுத்தப்பட்டு உள்ளதாகவும் உதவி ஐஜி இ. டி. சாம்சன் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார். தமிழக காவல்துறையின் இந்த அறிக்கையை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள் இப்பொதுநல வழக்கை முடித்து வைத்து உத்தரவு பிறப்பித்தனர்.