நெல்கொள் முதல் செய்யும் போது லஞ்சம் வாங்கப்படுவதாக எழும் குற்றச்சாட்டிற்கு வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அளித்த பதில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
10 ஆண்டுகளுக்குப் பிறகு ஆட்சியில் அமர்ந்துள்ள திமுக முதல் நாளில் இருந்தே சிறப்பாக செயல்பட்டு வருவதாக மக்கள் புகழ்ந்து தள்ளி வருகின்றனர். குறிப்பாக கொரோனா தடுப்பு பணிகள், நிவாரணம் மற்றும் ஊக்கத்தொகை அறிவிப்பு, மகளிருக்கு இலவச பேருந்து பயணம், பால் விலை குறைப்பு என அடுத்தடுத்து அதிரடி காட்டி வருகிறது முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு.
மருத்துவர்கள், செவிலியர்கள், காவலர்கள், துப்புறவு பணியாளர்களைப் போலவே ஊடகவியலாளர்களையும் முன்களப் பணியாளர்கள் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். இது செய்தியாளர்கள் மத்தியி பெரும் வரவேற்பை பெற்றது. இந்நிலையில் தஞ்சாவூரில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் செய்தியாளரை ஒருமையில் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
குறுவை சாகுபடி குறித்த தஞ்சையில் நடைபெற்ற ஆய்வு கூட்டத்தில் வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் பங்கேற்றார். அதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவரிடம், செய்தியாளர் ஒருவர், நெல் கொள்முதல் செய்யப்படும் போது விவசாயிகளிடம் லஞ்சம் பெறப்படுவதாக கேள்வி எழுப்பினார். அதற்கு அமைச்சர் ‘நீ கிறுக்குத்தனமாக கேள்வி கேட்டால் நானும் கிறுக்குத்தனமாக தான் பதில் சொல்லுவேன் போ’ என ஒருமையில் பதிலளித்தார். இது பத்திரிகையாளர்கள் மற்றும் மக்கள் மத்தியில் அதிருப்தியை உருவாக்கியுள்ளது.