அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டன் தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றியதாகவும், உடல் ரீதியாக பல்வேறு தொல்லைகளை கொடுத்ததாகவும் துணை நடிகை சாந்தினி கொடுத்த புகார் பரபரப்பை ஏற்படுத்தியது. மணிகண்டனுக்காக பலமுறை கருக்கலைப்பு செய்துள்ளதாகவும், இதனால் தன்னுடைய உடல் நலம் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.
அதுமட்டுமில்லாமல் அமைச்சர் உடன் நெருக்கமாக இருக்கும் போட்டோக்களையும், அவருடைய வாட்ஸ் அப் உரையாடல்களையும் கூட பகிரங்கமாக வெளியிட்டு நீதி கேட்டுள்ளார். சாந்தினி கொடுத்த புகாரில் முன்னாள் அமைச்சரை கைது செய்ய காவல்துறை பரபரப்பாக தேடிக்கொண்டிருக்கிறது. அவர் சென்னையில் தலைமறைவாக இருப்பதாகவும், உதவியாளரின் செல்போன் மூலமாக பேசிய போன் காலை வைத்து மணிகண்டனை தேடி வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில் அதிமுகவில் திருச்சியைச் சேர்ந்த மற்றொரு முக்கிய புள்ளியும் பாலியல் புகாரில் விரைவில் சிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சாந்தினி எடுத்த அதிரடி நடவடிக்கையை பார்த்த பாதிக்கப்பட்ட பெண் தானும் புகார் கொடுக்க தயாராக இருக்கிறாராம். இதை தெரிந்து கொண்ட முக்கிய புள்ளி அவரிடம் பஞ்சாயத்து பேசி வருவதாக தெரிகிறது. ஆனால் பாதிக்கப்பட்ட பெண்ணோ தன்னுடைய நண்பர்கள், வழக்கறிஞர் உதவியுடன் அந்த முக்கிய புள்ளியின் முகத்திரையை கிழிக்க தயாராகி வருகிறாராம். தற்போது அந்த பெண், திருச்சியில் புகார் கொடுப்பதை விட, சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் கொடுப்பது தான் நல்லது என்ற யோசனையில் இருக்கிறாராம்.