தமிழகத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. தலைநகரான சென்னையில் தொற்று கட்டுப்படுத்தப்பட்டு வரும் நிலையில், பிற மாவட்டங்களில் கொரோனாவின் ஆட்டம் ஆரம்பித்துள்ளது. மருத்துவர்கள், செவிலியர்கள், தூய்மை பணியாளர்கள், காவல் துறையினர், மாவட்ட ஆட்சியர்கள் என முன் களப்பணியாளர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவது மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
அதிலும் கொரோனா தொற்றுக்கு திமுக, அதிமுக என எவ்வித பாகுபாடும் பார்க்காமல் எம்.எல்.ஏ.க்கள் பாதிக்கப்படுவது இருகட்சி தலைமையையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பு திருவாடானை தொகுதி எம்.எல்.ஏ.வும், நடிகருமான கருணாஸ், பூம்புகார் எம்.எல்.ஏ. பவுன்ராஜ், வாசுதேவ நல்லூர் எம்.எல்.ஏ. மனோகரன், பழனி தொகுதி எம்.எல்.ஏ.செந்தில்குமார் ஆகியோருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு, சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த அதிர்ச்சியில் இருந்தே தொண்டார்கள் மீளாத நிலையில், மண்ணச்சநல்லூர் எம்.எல்.ஏ. பரமேஸ்வரி முருகனுக்கும், மதுரை மாவட்டம் சோழவந்தான் தொகுதி எம்.எல்.ஏ. மாணிக்கத்திற்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து பரமேஸ்வரி திருச்சியில் தனியார் மருத்துவமனையிலும், மாணிக்கம் மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இருவரும் அதிமுக எம்.எல்.ஏ.க்கள் என்பதால் கட்சி தலைமையும், தொண்டர்களும் சற்று கலக்கத்தில் உள்ளனர்.